பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட நால்வரும் என்கவுண்டர் செய்யப்பட்டமை குறித்த விசாரணைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதற்காக தேசிய மனித உரிமைகள் ஆணைய அதிகாரிகள் இன்று (சனிக்கிழமை) ஹைதராபாத்திற்கு வருகை தந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து, கொன்ற இடமும், என்கவுண்டரில் நால்வரும் சுட்டுக் கொல்லப்பட்ட இடமுமான சடன்பள்ளி கிராமத்தில் மனித உரிமை ஆணைய அதிகாரிகள் ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் என்கவுண்டரில் கொலை செய்யப்பட்ட குறித்த நால்வரின் உடல்களும் வைக்கப்பட்டுள்ள மஹபூப்நகர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில், ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளதுடன், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரையும் நேரில் சந்தித்து விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.