சம்பவம் தொடர்பாக பொதுஜன பெரமுனவின் ஆதரவாளருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம், அமைச்சர் பந்துல குணவர்தனவிற்கு இன்று (வியாழக்கிழமை) கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில் 2001 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் அரசாங்கம் மாறியபோது எந்தவொரு ஊடக நிறுவனத்திலும் எந்தவொரு நபருக்கும் உடல் ரீதியாக தாக்கப்பட்டதில்லை என்பதை அக்கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த திங்கட்கிழமை லேக் ஹவுஸ் அலுவலகத்திற்குள் நுழைந்த குறித்த ஆதரவாளர், புதிய ஊடகப் பிரிவின் முன்னாள் தலைவர் மதுக தக்ஸலா பெர்னாண்டோவை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று தங்கியிருந்தார்.
இந்நிலையில் “ஒழுக்கமான நாட்டை உருவாக்குவதாக உறுதியளித்து ஆட்சிக்கு வந்த இவர்கள், தற்போது இவ்வாறு நடந்துகொள்வதையிட்டு நாங்கள் மிகுந்த கவலையடைகின்றோம்” என அகில விராஜ் காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் “ஊடகவியலாளர்கள் தங்கள் சொந்த நிறுவனங்களில் இவ்வாறு தாக்கப்படுவதை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம், இந்த சம்பவம் தொடர்பாக உடனடியாக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு பொறுப்பான அமைச்சராக உங்களை தயவுசெய்து கேட்டுக்கொள்கிறோம்” என அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.