இராஜ்ஜியத்தையோ அல்லது தனியான அலகினையோ இனிமேல் எந்தவொரு அடிப்படைவாதிகளும் கோர முடியாத நிலைமை இலங்கையில் ஏற்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். கெஹலிய ரம்புக்வெல்ல மேலும் கூறியுள்ளதாவது, “ஜனாதிபதித் தேர்தலில் நாம் பாரிய வெற்றியை அடைந்துள்ளோம்.
இந்த வெற்றியில் ஒரு முக்கியத்துவம் காணப்படுகிறது. அதாவது, எந்தவொரு அடிப்படைவாதத்திற்கும் அடிபணியாமல்தான் இந்த வெற்றியை நாம் பெற்றுக்கொண்டுள்ளோம்.
72 வருடங்களுக்குப் பிறகு, சிங்கள மக்களின் வாக்குகளால் ஜனாதிபதியொருவர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த வெற்றியில் அனைத்து இன மக்களுக்கும் இடமுள்ளது.
நல்லிணக்கம் என்பது பதாதைகளில் அல்லாது மக்களின் மனங்களில் இருந்து வரவேண்டும். இதுதான் உண்மையான வெற்றியாகும்.
எமது இந்த வெற்றியை இன்று எந்தவொரு அடிப்படைவாதிகளும் உரிமைக் கொண்டாட முடியாது. நாம் இனவாதிகள் அல்ல.
உங்களுக்கு வாக்குகளைத் தருகிறோம். நீங்கள் எங்களுக்கு தனி இராஜ்ஜியத்தை தாருங்கள் அல்லது தனி அலகு தாருங்கள் என இனி எவரும் எம்மிடம் கோர முடியாது. இந்த விளையாட்டுக்கள் எல்லாம் இனிமேல் எம்மிடம் செல்லுபடியாகாது” என குறிப்பிட்டுள்ளார்.