தவிர தனது பாதுகாப்புக்கான ஆட்களின்தொகையையும் அவர் குறைத்திருக்கிறார். தனது இந்தியப் பயணத்தின் போது மிகக்குறைந்த தொகை அதிகாரிகளையே அழைத்துச் சென்றிருக்கிறார். தனி விமானத்தில் அவர் ஆடம்பரமாக செல்லவில்லை.
அவருடைய இதுபோன்ற நடவடிக்கைகளை ஒரு பகுதியினர் புகழ்ந்து எழுதத் தொடங்கிவிட்டார்கள். எப்படி மைத்திரிபால சிறிசேன பதவிக்கு வந்த புதிதில் எளிமையாகவும் பணிவாகவும் காட்சி தந்த பொழுது அதை உருப்பெருக்கி சிலாகித்துச் எழுதியது போல இப்பொழுதும் ஒரு தரப்பு கோட்டாபயவை புகழ்ந்து எழுதுகிறது.
ஆனால் அதே சமயம் இதுபோன்ற வெளித்தெரியும் கவர்ச்சியான மாற்றங்களை விடவும் கட்டமைப்பு மாற்றங்களே அவசியம் என்பதனை வலியுறுத்தும் விமர்சகர்கள் கட்டமைப்பு மாற்றங்கள் செய்யப்படாத ஒரு வெற்றிடத்தில் தான் இதுபோன்ற வெளித்தோற்ற மாற்றங்கள் கவர்ச்சிகரமாக காட்டப்படுகின்றன என்றும் சுட்டிக்காட்டுகிறார்கள். கோட்டாபய அவ்வாறு கட்டமைப்பு சார் மாற்றங்களை செய்வாரா? அல்லது அவரால் செய்ய முடியுமா?
கட்டமைப்பு சார் மாற்றங்களை செய்வது என்று சொன்னால் அதை எங்கிருந்து தொடங்குவது? அவர் தனது தேர்தல் வாக்குறுதிகளில் கூறியதுபோல அபிவிருத்தியில் இருந்தா? அல்லது ஊழல் அற்ற நிர்வாகத்திலிருந்தா ?
இலங்கையைப் பொறுத்தவரை கட்டமைப்பு சார் மாற்றங்கள் எனப்படுபவை பிரதானமாக இனங்களுக்கிடையிலான உறவுகள் சம்பந்தப்பட்டவை. இனங்களுக்கிடையிலான உறவுகளுக்கு அடிப்படையாக இருப்பது யாப்பு. அந்த சட்ட அடித்தளம்தான் இனங்களுக்கிடையிலான சமூக உடன்படிக்கையை குறிக்கும். அவ்வாறான ஒரு சமூக உடன்படிக்கை இலங்கைத் தீவில் இதுவரை எழுதப்படவில்லை. அப்படி எழுதப்பட்டால் அதன்படி யாப்பு மாற்றப்படவேண்டும். அதாவது பல்லினத் தன்மை மிக்கதாக பல்சமய சூழலை பாதுகாப்பதாக யாப்பு மாற்றி எழுதப்பட வேண்டும். அவ்வாறு யாப்பை பல்லினத் தன்மை மிக்கதாக மாற்றி எழுதுவதென்றால் சிங்களவர்கள் தமிழர்கள் முஸ்லிம்கள் ஆகிய மூன்று மக்கள் கூட்டங்களையும் இச்சிறிய தீவின் சக நிர்மாணிகளாக ஏற்றுக்கொண்டு யாப்பு உருவாக்கப்பட வேண்டும். அப்படி ஒரு யாப்பை புதிய ஜனாதிபதி உருவாக்குவாரா ? அல்லது அவரால் உருவாக்க முடியுமா?
அப்படி உருவாக்குவது என்றால் அவர் எந்த கட்டமைப்பின் ஊடாக வெற்றி பெற்றாரோ அந்தக் கட்டமைப்பை உடைத்துக்கொண்டு வெளியே வரவேண்டும். சிங்கள பௌத்த பெருந் தேசியவாத அலையொன்றைத் தோற்றுவித்து அதன்மூலம் வாக்குகளை திரட்டி அவர் வெற்றி பெற்றார்.அவர் இப்பொழுது அந்த வெற்றியின் கைதி. இதை இன்னும் ஆழமாகச் சொன்னால் அவர் இறந்த காலத்தின் கைதி. அந்த காலத்தில் அவர் பெற்ற வெற்றி காரணமாகத்தான் அவர் இப்பொழுதும் வெற்றி பெற்றிருக்கிறார். அந்த வெற்றியை ஞாபகப்படுத்தத்தான் அவர் ருவான்வெலிசயவில் பதவியேற்றார். அந்த வெற்றியை ஞாபகப்படுத்தத்தான் தனது பாதுகாப்புத்துறை செயலராக களமுனையில் நின்ற ஒரு முன்னாள் தளபதியை நியமித்தார். புதிய பாதுகாப்பு அமைச்சர் அவருடைய குடும்ப உறுப்பினர்.
எனவே தொகுத்துப் பார்த்தால் 2005லிருந்து 2015 வரையிலுமான ராஜபக்சக்ளின் முதலாவது ஆட்சிக்காலத்தின் அதே சாயலோடுதான் எல்லாமே காணப்படுகின்றன. புதிய அமைச்சரவையில் முஸ்லிம்கள் ஒருவருமில்லை. பெண்களுக்கு மிகக் குறைந்த இடமே. அடுத்த பொதுத் தேர்தல் வரையிலும் முஸ்லீம்கள் இல்லாத ஒரு நாடாளுமன்றத்தை வைத்திருப்பதன் மூலம் தனது இனரீதியிலான வாக்கு வங்கியை பாதுகாக்க புதிய ஜனாதிபதி முயலுகிறார்? இப்படிப் பார்த்தால் அவர் தனது வெற்றியின் கைதியாகவே தெரிகிறார்.
அதுமட்டுமல்ல தனது வெளியுறவுக் கொள்கையிலும் அவர் ராஜபக்சக்களின் முதலாவது ஆட்சிக்காலத்தையே நினைவூட்டுகிறார். மகிந்த ராஜபக்ச முதன்முதலாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட பொழுது தனது மஹிந்தசிந்தனையில் தன்னுடைய வெளியுறவுக் கொள்கையை ஆசிய மைய வெளியுறவுக் கொள்கை என்று வர்ணித்திருந்தார். முதலாவது ஆட்சிக்காலத்தில் அவர்கள் இந்தியாவையும் சீனாவையும் மையமாக வைத்தே உலகத்தைக் கையாள முற்பட்டார்கள். குறிப்பாகப் போரை வெற்றி கொள்ளும் வரை அப்படிப்பட்ட வெளியுறவு அணுகுமுறை ஒன்றைதான் அவர்கள் கடைப்பிடித்தார்கள். ஆனால் யுத்த வெற்றிகளால் நிதானமிழந்ந போது அவர்கள் சீனாவை நோக்கிக் கூடுதலாகச் சாய்ந்தார்கள். அதன் விளைவாகவே முதலாம் ராஜபக்சவின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. அதிலிருந்து கற்றுக் கொண்ட பாடங்களின் அடிப்படையில் இப்பொழுது இந்தியாவைப் பகைக்காமல் இருப்பது என்பதை நமது வெளியுறவுக் கொள்கையின் உயிர் நிலையான அம்சமாக பேணுவதன் மூலம் ஏனைய நாடுகளை வெற்றிகரமாக கையாளலாம் என்று ராஜபக்சக்கள் நம்புகிறார்களா? இந்தியாவைப் பகைக்காமல் அதேசமயம் சீனாவைத் தூக்கி மடியில் வைத்திருப்பது.
இந்தியாவை பகைக்காத ஒரு வெளியுறவுக் கொள்கை என்பது இனப்பிரச்சினைக்கான தீர்வோடு தொடர்புடையது. அதன்மூலம் 13 ஆவது திருத்தச் சட்டத்துக்குள் இனப்பிரச்சினைக்கான தீர்வை பெட்டி கட்டலாம். இறந்த காலத்துக்கு பொறுப்புக்கூறத் தயாராக இருந்தால்தான் மேற்கை நோக்கி அதிகம் நெருங்கி செல்லலாம். ஏனெனில் ஐநாவின் 30/1 தீர்மானமானது பொறுப்புக் கூறலுக்கானது. ஆனால் ராஜபக்சக்கள் அந்த தீர்மானத்தை ஏற்றுக் கொள்ளவில்லை என்று கூறுகிறார்கள். அது முன்னைய அரசாங்கத்தால் செய்யப்பட்டது என்று கூறுகிறார்கள். அதை மீளாய்வு செய்ய வேண்டும் என்றும் கூறுகிறார்கள். அவர்களுடைய தேர்தல் வாக்குறுதிகளிலும் அது இருந்தது. புதிய வெளியுறவு அமைச்சரும் பதவியேற்ற உடனேயே அதைச் குறிப்பிட்டிருக்கிறார்.
ஐநாவின் 30/1 தீர்மானம் எனப்படுவது உலக சமூகத்தோடு இலங்கை அரசாங்கம் செய்துகொண்ட உடன்படிக்கை. அந்த உடன்படிக்கையை எடுத்த எடுப்பில் கிழித்து எறிய முடியாது. அப்படி செய்தால் அது உலக சமூகத்தோடு குறிப்பாக மேற்கு நாடுகளோடு நேரடியாக மோதுவதாக அமையும். எனவே பொறுப்புக்கூறலுக்கான அந்த தீர்மானத்தை நினைத்த மாத்திரத்தில் கைவிட முடியாது. அதேசமயம் தீர்மானத்தை ஏற்றுக் கொண்டால் நிலைமாறுகால நீதியின் கீழ் போர்க்குற்ற விசாரணைகளை ஏற்றுக்கொள்ள வேண்டி இருக்கும்.
ஏற்கனவே ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் தீர்மானத்தை நிறைவேற்றியது. ஆனால் அதிலுள்ள போர்க்குற்ற விசாரணை என்ற அம்சத்தை அமுல்படுத்த துணியவில்லை. ஐநா விடம் ஒப்புக்கொண்ட வீட்டு வேலைகள் பெரும்பாலானவற்றை அந்த அரசாங்கம் பொய்க்குத்தான் செய்தது. ஒன்றையுமே முழுமையாக நிறைவேற்றவில்லை.
புதிய ஜனாதிபதி அந்த தீர்மானத்தை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்று வெளிப்படையாகக் கூறுகிறார். இது மேற்கு நாடுகளுடன் அவர்களுடைய உறவைப் பாதிக்கும். அதோடு முன்னைய அரசாங்கம் அமெரிக்காவோடு செய்ய முற்பட்ட மூன்று உடன்படிக்கைகளை ராஜபக்சக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அமெரிக்காவின் நிதி உதவி பெறுவதற்கான மில்லேனியம் நிதி உடன்படிக்கை, சோபா உடன்படிக்கை, கையகப்படுத்தல் மற்றும் குறுக்கு சேவைகள் உடன்படிக்கை ( ACSA ) என்பனவே அம்மூன்று உடன்படிக்கைகள்.
எனவே மேற்கு நாடுகள் சம்பந்தப்பட்ட மொத்தம் 4 உடன்படிக்கைகளை மீளாய்வு செய்ய வேண்டும் என்று ராஜபக்சக்கள் கேட்கிறார்கள். சீன நிறுவனம் ஒன்றுக்கு அம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விட்ட உடன்படிக்கையை அவர்கள் ரத்து செய்துவிட்டதாக கூறப்படுகிறது. அதற்கூடாக இந்தியாவுக்கும் மேற்கு நாடுகளுக்கும் அவர்கள் சாதகமான சமிக்கைகளை காட்டுகிறார்கள்.
அம்பாந்தோட்டை விடயத்தில் சீனா ராஜபக்ஷக்களுக்கு விட்டுக்கொடுக்கும். எப்படி ரணில் விக்கிரமசிங்க கொழும்பு துறைமுக நகரத்தின் கட்டுமானப் பணிகளைத் தொடர அனுமதித்தாரோ அப்படித்தான் இதுவும். ரணில் விக்கிரமசிங்க மேற்கு நாடுகளுக்கு மிக நம்பிக்கையான ஒருவர். அவர் சீனாவோடு சுதாகரித்துக் கொள்வதற்காக சில விடயங்களில் விட்டுக்கொடுக்கும் போது அதை மேற்கு நாடுகள் புரிந்து கொள்ளும். தமது விசுவாசி எதைச் செய்தாலும் இறுதியிலும் இறுதியாக தங்களுக்கு உண்மையாக இருப்பார் என்று மேற்கு நாடுகள் நம்பும். கொழும்பு துறைமுக நகரம் விடயத்திலும் அப்படித்தான். சீனாவின் விடயத்திலும் ராஜபக்ச சகோதரர்கள் யாருக்கு எதை விட்டுக் கொடுத்தாலும் அவர்களுடைய இதயத்தில் தனக்குத்தான் இடமுண்டு என்று சீனா நம்ப இடமுண்டு. கோட்டாபயவைப் பாதுகாக்க அம்பாந்தோட்டை விடயத்தில் சீனா சுதாகரிக்கும்?
தனது வெளியுறவுக் கொள்கையில் எல்லா நாடுகளையும் சம தூரத்தில் வைக்கப்போவதாக புதிய ஜனாதிபதி கூறியிருக்கிறார். ஆனால் அது ஒரு கவர்ச்சியான கொள்கைப் பிரகடனம்தான். நடைமுறையில் அவர் சீனாவின் இதயத்தில் இருப்பவர். தவிர இலங்கை தீவு ஏற்கனவே சீன மயப்பட்டுவிட்டது. சீனாவின் கடன் பொறிக்குள் விழுந்துவிட்டது. அதிலிருந்து மீள்வது கடினம். எனவே இந்தியாவைப் பகைக்காமை என்பதனை தமது வெளியுறவுக் கொள்கையின் உயிர் நிலையாக வைத்துக்கொண்டு ராஜபக்சக்கள் சீனாவையும் அரவனைப்பார்கள்.
அந்த உறவு தனிய வர்த்தக ரீதியிலானது என்று கோட்டாபய கூறுகிறார். ஆனால் சீனா செய்யும் உதவிகள் தனிய வர்த்தக ரீதியிலானவை அல்ல. அது ஒரு பொறி. கடன் பொறி. ஏற்கனவே ஆசிய ஆபிரிக்க நாடுகளை சீனா அந்தப் பொறி பொறிள் சிக்க வைத்துவிட்டது. இலங்கை விரும்பினாலும் அந்த பொறியை விட்டு வெளியே வர முடியாது. இலங்கை எப்படி அந்த பொறிக்குள் விழுந்தது?
யுத்த வெற்றி வாதத்துக்கு ராஜபக்சக்கள் தலைமை தாங்க முற்பட்டதனால்தான். யுத்த வெற்றி வாதத்திற்கு தலைமை தாங்கினால் மேற்கை நோக்கியும் இந்தியாவை நோக்கியும் போவதில் வரையறைகள் உண்டு. குறிப்பாக மேற்கை நோக்கி ஒரு கட்டத்துக்கு மேல் போக முடியாது. இந்தியாவிலும் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் தமிழ்ச் சமூகங்கள் உண்டு. புலம்பெயர்ந்த தமிழர்கள் உண்டு. அவர்கள் அந்தந்த நாடுகளின் அரசாங்கங்களின் மீது செல்வாக்கு செலுத்துவார்கள். ஆனால் சீனாவில் தமிழ்ச் சமூகம் இல்லை. தவிர சீனா உதவிகளுக்கு மனித உரிமைகளை முன் நிபந்தனையாக விதிப்பதில்லை. இவற்றோடு மற்றொரு முக்கிய காரணமும் உண்டு இந்தியாவை சுற்றிவளைக்கும் முத்துமாலை வியூகத்தில் சீனாவுக்கு முத்துக்கள் தேவை.
இப்படிப்பட்ட ஒரு பின்னணியில்தான் ராஜபக்சக்கள் சீனாவை நோக்கிச் சாய்ந்தார்கள். எனவே யுத்த வெற்றி வாதத்திற்கு தலைமை தாங்கினால் சீனாவை நோக்கிதான் போக வேண்டும். அது ஒரு பொறி. இலங்கைத்தீவு அந்த பொறிக்குள் சிக்கியிருக்கிறது.அந்த பொறியை விட்டு வெளியேறுவது என்பது இனப்பிரச்சினைக்கான தீர்வில்தான் தங்கி இருக்கிறது. யுத்த வெற்றி வாரத்துக்கு வெளியே வந்தால்தான் இனப்பிரச்சினைக்கான தீர்வை கண்டுபிடிக்கலாம்.
இல்லையென்றால் 13ஆவது திருத்தத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு தீர்வை வழங்குவதன் மூலம் இந்தியாவைச் சமாளிக்கலாம். மேற்கு நாடுகள் அளவுக்கு இந்தியா பொறுப்புக்கூறலை வற்புறுத்தாது. எனவே இந்தியாவைப் பகைக்காமை என்பதனை மையமாக வைத்துக் கொண்டு சீனாவையும் அரவணைத்தால் மேற்கு நாடுகளை வெற்றிகரமாக கையாளலாம் என்று ராஜபக்சக்கள் சிந்திக்கக் கூடும்.
புதிய ஜனாதிபதி வழங்கிய சமிக்ஞைகளுக்கு இந்தியா சாதகமாக பதில்வினையாற்றியிருக்கிறது. கோட்டாபயவை இந்திய பிரதானிகள் வரவேற்ற விதம், வழங்கப்பட்ட மரியாதை, அரவணைப்பு என்பவற்றைத் தொகுத்துப் பார்த்தால் அது தெரிகிறது.
கடந்த நொவம்பர் மாதம் அதாவது மைத்திரிபால சிறிசேன ஆட்சிமாற்றத்தின் வலுச் சமநிலையை குழப்பிய ஒரு மாத காலத்தில் மாலைதீவுகளில் நடந்த தேர்தலில் சீனாவின் ஆளாக பார்க்கப்பட்ட தலைவர் தோற்கடிக்கப்பட்டார். இந்தியாவுக்கு நெருக்கமானவர் தெரிவு செய்யப்பட்டார். அதாவது இலங்கைதீவில் மேற்கு நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் சௌகரியமான ஓர் அரசாங்கம் ஈடாடிய பொழுது மாலைதீவுககளில் சீனாவின் முத்துமாலைக்குள்ளிருந்து ஒரு முத்து கழன்று வந்தது.
ஆனால் கடந்த மாதம் இலங்கை தீவில் நடந்த தேர்தலில் மற்றொரு முத்து மறுபடியும் சீனாவின் கைக்குள் போய்விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது. இந்த அச்சத்தின் பின்னணியில் தன்னை நோக்கி வரும் கோட்டாபயவை இந்தியா தழுவிக் கொள்ளும். முதலில் இந்தியா இதயத்தில் சீனா என்ற அடிப்படையில் கோட்டாபய தனது வெளியுறவுக் கொள்கையை வகுத்துக் கொண்டு மேற்கு நாடுகளை வெட்டி ஓடப் போகிறாரா?
நிலாந்தன் மகா