தோணா வழியைத் தடைசெய்து சட்டவிரோதமாகக் குளம் அமைத்ததைக் கண்டித்து காத்தான்குடி நகரில் கண்டன ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது.
காத்தான்குடி நகர சபைத்தலைவர் எஸ்.எச்.எம்.அஸ்பர் தலைமையில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டப் பேரணில், கன மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டோர் சமூக செயற்பாட்டாளர்களும் கலந்து கொண்டனர்.
இங்கு கருத்துத் தெரிவித்த நகர சபைத் தலைவர், “ஆரையம்பதி பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் மக்களின் காணிகளை அபகரித்து, தேவையற்ற விதத்தில் எதற்கும் பிரயோசனமில்லாமல், ஊர் மத்தியில் அமைக்கப்பட்டுள்ள குளம் ஒன்றினால் இயற்கையாக நீரோடும் வழி தடைப்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் காத்தான்குடிப் பிரதேசத்தைச் சேர்ந்து சுமார் 5000 முஸ்லிம் குடும்பங்களும் கிட்டத்தட்ட அதே எண்ணிக்கையுடைய ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவில் வசிக்கும் தமிழ் மக்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
எனவே, இந்நிலைமைக்கு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுமென கோரியே இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்” என்றார்.