குற்றவாளிகளை தூக்கிலிட அனுமதிக்க வேண்டும் என சர்வதேச துப்பாக்கி சுடும் வீராங்கனை வர்திகா சிங், உட்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து இரத்தத்தில் கடிதம் எழுதிய அவர், நிர்பயா வன்புணர்வுக் குற்றவாளிகளை தூக்கிலிட தன்னை அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், தனது முயற்சிக்கு பெண் நடிகைகள், பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளிக்க வேண்டும் என்றும் இதன்மூலம் சமுதாயத்தில் நாம் மாற்றம் கொண்டுவர முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் கடந்த 2012 டிசம்பர் 16ஆம் திகதி மருத்துவ பீட மாணவி நிர்பயாவை 6 பேர் கொண்ட குழுவினர் ஓடும் பேருந்தில் பாலியல் துஷ்பிரயோகம் செய்து பேருந்தில் இருந்து தூக்கி வீசினர்.
இதில் படுகாயமடைந்த நிர்பயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி டிசம்பர் 29ஆம் திகதி உயிரிழந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இது தொடர்பான விசாரணைகளில் ராம்சிங், பவன்குப்தா, முகேஷ்சிங், வினய் சர்மா, அக்சய் தாக்கூர் மற்றும் ஒரு சிறுவன் என 6 பேர் கைது செய்யப்பட்டனர். 6 பேரில் 5 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இதில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட ராம்சிங் டெல்லி திகார் சிறையில் உயிரிழந்தார். அத்துடன் குறித்த சிறுவன் தனது தண்டனை காலம் நிறைவடைந்த நிலையில், கடந்த 2015ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டார். ஏனைய நால்வருக்கும் உச்ச நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
இதற்கான நடவடிக்கைகளை டெல்லி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.