துஷ்பிரயோகத்திற்கு ஆளாக்கப்பட்டு எரிக்கப்பட்ட பெண்ணுக்கு டெல்லி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அவரது உடல்நிலை மோசமாக உள்ளதென மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
உத்தரப் பிரதேச மாநிலம், உன்னாவ் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த ஆண்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். குறித்த பெண் வழங்கிய தகவலுக்கு அமைய இருவர் 10 நாட்களுக்கு முன் கைது செய்யப்பட்டனர். குறித்த இருவரும் பிணையில் விடுதலையாகியுள்ளதாவும் தெரிவிக்கப்படுகின்றது.
இது குறித்த வழக்கு விசாரணைகளுக்காக தனது கிராமத்திலிருந்து, ரே பரேலியில் உள்ள நீதிமன்றத்துக்கு புறப்பட்ட குறித்த பெண்ணை, 5 பேர் கொண்ட குழுவினர் மண்ணெண்ணெய் ஊற்றி உயிரோடு எரியூட்டியுள்ளனர். இந்த விவகாரம் அப்பகுதி மக்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதில் படுகாயமடைந்த குறித்த பெண் லக்னோவிலிருந்து விமானம் மூலம் டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டு, டெல்லியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் இது தொடர்பில் வாக்குமூலம் வழங்கியுள்ள குறித்த பெண், தன்னை பாலியல் துஷ்பிரயோகம் செய்தவர்களே தீயிட்டு கொளுத்தியதாக தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், கால்நடை வைத்தியரான பிரியங்கா பாலியல் துஷ்பிரயோகத்திற்கு பின் எரித்து கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.