பிரான்சிஸை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் விடுத்த உத்தரவிற்கமைய அவர் வெலிக்கடை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கடந்த நவம்பர் மாதம், தான் ஒரு குழுவினரால் கடத்தப்பட்டதாகவும் கடத்தியவர்கள் தன்னிடம் வெளிநாட்டுக்கு தப்பியோடியுள்ளதாக கூறப்படும் நிஸாந்த சில்வா என்ற பொலிஸ் அதிகாரி குறித்து வினவியதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
எவ்வாறாயினும் இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளுக்கு அமைய அது தொடர்பான எந்தவித தகவலும் வெளியாகவில்லையென அரச சிரேஸ்ட சட்டத்தரணி ஜனக்க பண்டார கூறினார்.
இந்நிலையில் இலங்கைக்கான சுவிஸ் தூதரகம் மற்றும் கடத்தப்பட்டதாக கூறும் பெண் ஆகியோர் தெரிவித்த கருத்துக்கள் ஒன்றுக்கொன்று முரண்பாடானதாக காணப்பட்டன.
மேலும் இத்தகைய கருத்துக்கள் சந்தேகத்திற்குரியவை என்பதால் அவரை குற்றவியல் தண்டனை சட்டத்தின் 120 ஆம் மற்றும் 190 பிரிவுகளுக்கு அமைய சந்தேகநபராக பெயரிட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு சட்டமா அதிபர் பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கியதாக அரச சிரேஸ்ட சட்டத்தரணி இதன்போது தெரிவித்தார்.
இந்த சம்பவத்தின் ஊடாக நாட்டுக்கு பாரிய அபகீர்த்தி ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து அவர் குறித்த பெண்ணுக்கு பிணை வழங்கினால் அவர் நாட்டில் வெளியேற வாய்புள்ளதாகவும் குறிப்பிட்டார்.
எனவே சம்பவம் தொடர்பான முழுமையான விசாரணைகள் முடிவடையும் வரை அவருக்கு பிணை வழங்குவதற்கு ஆட்சேபனை தெரிவிப்பதாகவும் அரச சிரேஸ்ட சட்டத்தரணி ஜனக்க பண்டார கூறினார்.
இதன்போது குறிக்கிட்ட சந்தேகநபர் சார்பில் நீதிமன்றத்தில் முன்னிலையான சட்டத்தரணி உபுல் குமாரப்பெரும சந்தேகநபருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் பிணை வழங்க கூடியவை என்பதால் அவரை பிணையில் விடுவிக்குமாறு கோரினார்.
எனினும் சந்தேகநபர் விசாரணைகளுக்கு உரிய வகையில் ஒத்துழைப்பு வழங்காதமையால் தற்போது அவருக்கு பிணை வழங்கினால் அது விசாரணைகளுக்கு தடையாக அமையும் என தெரிவித்த கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்ற நீதிபதி லங்கா ஜயரத்ன, சந்தேகநபரை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
அதேபோன்று எதிர்வரும் 19 ஆம் திகதி குறித்த பெண்ணை அங்கொட மனநல நிருவகத்தில் ஒப்படைத்து மலநல பிசோதனைகளை முன்னெடுக்குமாறும் கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்ற நீதிபதி சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.