நாடாளுமன்றத்தில் நிறைவேற்றினால், உள்துறை அமைச்சர் அமித் ஷா மீது தடை கொண்டுவரப் பரிந்துரை செய்வோம் என எச்சரித்த அமெரிக்கச் சர்வதேச மதச் சுதந்திரத்துக்கான ஆணைக்குழுவிற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.
குடியுரிமை திருத்த சட்டமூலம் தொடர்பான விவகாரத்தில் எந்தவிதமான வழக்காடும் உரிமையும் இல்லாத அமெரிக்கச் சர்வதேச மதச்சுதந்திர ஆணைக்குழு, முழுமையான விவரங்களை அறியாமல், அனுமானங்களோடும், பாரபட்சத்தோடும் கருத்துத் தெரிவித்துள்ளது என மத்திய வெளிவிவகார அமைச்சின் செய்தி தொடர்பாளர் கூறினார்.
கடந்த காலங்களிலும் அமெரிக்க மதச் சுதந்திர ஆணைக்குழு இதுபோன்று கருத்துக்களை தெரிவித்திருப்பதால் இதில் வியப்பு ஏதும் இல்லை எனவும் அமைச்சின் செய்தி தொடர்பாளர் ராவேஷ் குமார் கூறினார்.
அமித் ஷாவுக்கு தடை விதிக்க ஆலோசிப்போம் என்று கூறிய அமெரிக்க அமைப்பு கடந்த காலங்களில் குஜராத் முதல்வராக இருந்த மோடிக்கு அமெரிக்கா விசா மறுத்ததற்கு ஆதரவாக இருந்தது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
அகதிகளாக வரும் மக்களுக்கு நடைமுறையில் உள்ள சிரமங்களைக் களையவும், அவரின் அடிப்படை மனித உரிமைகளைப்பெறவும் இந்த சட்டமூலம் அனுமதிக்கிறது என்றும் இதுபோன்ற முன்னெடுப்புக்களை விமர்சிக்கக் கூடாது எனவும் ராவேஷ் குமார் தெரிவித்தார்
குடியுரிமைத் திருத்த சட்டமூலத்தை மக்களவையில் நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்தார். 7 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த விவாதத்துக்குப்பின் சட்டமூல நள்ளிரவில்ம் நிறைவேற்றப்பட்டது.
இந்த சட்டமூலத்திற்கு ஆதரவாக 311 உறுப்பினர்களும், எதிராக 80 உறுப்பினர்களும் வாக்களித்தனர். இந்த மசோதா நாளை மாநிலங்களவையில் தாக்கலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.