நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்த சட்டமூலத்தில் இலங்கை தமிழர்கள் உள்வாங்கப்படாமை பெரும் கவலையளிக்கின்றது என மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
குடியுரிமை திருத்த சட்டமூலம் தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “நேற்று முன்தினம் இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்த சட்டமூலத்தில் இந்தியர் அல்லாத பாகிஸ்தான் பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து குடியேறியவர்களுக்கு இந்திய குடியுரிமை பெற்றுக் கொடுப்பதற்கு எடுக்கப்பட்ட சட்ட திருத்த சட்டமூலத்தை பாராட்டுக்குரியது.
அதேவேளை எங்களுடைய வடகிழக்கு மக்கள் மற்றும் மலையக மக்கள் தொடர்பாக உள்வாங்கப்படாமை மிகவும் கவலையளிக்கின்றது. அந்த திருத்த சட்டமூலத்தை பிரகாரம் 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆந் திகதிக்கு முன்னர் இந்தியாவில் குடியேறியவர்கள் இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அதில் இலங்கை தமிழர்களான மலையக மக்கள் வடகிழக்கு மக்கள் தொடர்பாக எதனையும் குறிப்பிடப்படவில்லை. வடகிழக்கு தமிழர்கள் யுத்தம் காரணமாக இந்தியாவிற்கு இடம்பெயர்ந்தவர்கள் மலையக மக்களை பொறுத்த அளவில் அவர்கள் இந்தியாவில் இருந்து 200 வருடங்களுக்கு முன்பு இங்கு கொண்டுவரப்பட்டு அவர்கள் மீண்டும் இந்தியாவிற்கு திரும்பி சென்றவர்கள்.
அவர்கள் மீண்டும் இலங்கைக்கு வருவதற்கான வாய்ப்புகள் இல்லை.எனவே அவர்கள் இந்தியாவில் தாங்கள் வசிக்கின்ற பகுதிகளில் அமைந்துள்ள மாவட்ட ஆட்சியாளர் (கலக்டர்) ஊடாக இந்திய குடியுரிமை கோரி விண்ணப்பம் செய்திருக்கின்றார்கள்.
அவர்களுக்கு இந்திய குடியுரிமையை பெற்றுக் கொடுக்க இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.அதனை மோடி அவர்களால் மாத்திரமே நிறைவேற்ற முடியும்.
மேலும் வடகிழக்கு தமிழர்கள் தொடர்பாக இலங்கைக்கு மீண்டும் திரும்ப விரும்புகின்றவர்களுக்கு அவர்களுக்கான வாழ்வாதாரம் வீடுகள் தொடர்பாக கவனம் செலுத்தி ஒரு தீர்வை பெற்றுக் கொடுக்க வேண்டும்.
இல்லாவிட்டால் இந்த இரண்டு தமிழர்களும் இலங்கையிலும் குடியுரிமை இல்லாமல் இந்தியாவிலும் குடியுரிமை இல்லாமல் தாங்கள் பல்வேறு சிரமங்களை எதிர் நோக்கி வருகின்றார்கள்.
இந்த விடயமானது கடந்த பல வருடங்களாக இழுத்தடிக்கப்பட்டு வருகின்றதை நாம் அறிவோம். எனவே எங்களுடைய நாட்டின் மீது அதிக கவனம் எடுத்து செயற்பட்டு வருகின்ற இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்த விடயம் தொடர்பாக விசேட கவனம் செலுத்தி இதற்கான ஒரு நிரந்தர தீர்வை அவருடைய காலத்தில் பெற்றுக் கொடுக்க வேண்டும். அதனை அவரால் மாத்திரமே நிறைவேற்ற முடியும்” என குறிப்பிட்டுள்ளார்.