முதன்முறையாக நிகழ்வொன்றில் கலந்துகொண்ட சஜித் பிரேமதாச, தலைமைப் பதவி வழங்கப்படாவிட்டால் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக போட்டியிடப் போவதில்லை என கூறினார்.
ஸ்ரீ ஜெயவர்தனபுர கோட்டையில் இன்று (செவ்வாய்க்கிழமை) தனது கட்சி ஆர்வலர்களை சந்தித்த அவர், அவருக்கு கட்சி தலைமை வழங்கப்படாவிட்டால், பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ளும் நிலையில் தான் இல்லை என்பதை திட்டவட்டமாக அறிவித்தார்.
மேலும் பெரும்பான்மையான ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் அவரைத் தலைவராக வருவதற்க்கு விரும்பினால் கட்சித் தலைமையை ஏற்கத் தான் தயாராக இருப்பதாகவும் சஜித் பிரேமதாச கூறினார்.
அத்தோடு தான் கட்சியை பிளவுபடுத்தி கட்சியில் பிரிவுகளை உருவாக்க விரும்பவில்லை என தெரிவித்த சஜித் பிரேமதாச, அவ்வாறு பிரிந்திருப்பவர்களை ஒன்றாக்க முயற்சி செய்வதாக தெரிவித்தார்.
மேலும் ஜனாதிபதி தேர்தலின் பின்னர் ஏன் மௌனமாக இருந்தீர்கள் என இதன்போது கேள்வியெழுப்பப்பட்டது, இதற்கு பதிலளித்த சஜித் பிரேமதாச, ஜனாதிபதி தேர்தலின் போதன கடும் பிரசாரப் பணிகள் காரணமாக தனக்கு ஓய்வு அவசியம் என்பதால் அமைதியாக இருந்ததாக கூறினார்.