அமெரிக்காவின் மிலேனியம் சவால்கள் நிறுவனத்தின் மானியம் நிராகரிக்கப்படவில்லை என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அமைச்சர் டலஸ் அழகப்பெரும, “அரசாங்கம் இந்த ஒப்பந்தத்தை கவனமாக மதிப்பீடு செய்து, இறுதி முடிவு எடுப்பதற்கு முன்னர் அது விவாதத்திற்கும் பொதுமக்கள் முன்னிலையிலும் பகிரங்கப்படுத்தப்படும்” என கூறினார்.
ஆனால் அமெரிக்கவுடனான இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது குறித்து எந்த முடிவும் இதுவரை எடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
மேலும் இந்த ஒப்பந்தம் முதலில் நாடாளுமன்றத்தின் முன்வைக்கப்பட வேண்டும் என்றும் இறுதி முடிவு எடுப்பதற்கு முன்னர் பகிரங்கபடுத்தப்பட்டு, அதன் உள்ளடக்கங்கள் தொடர்பாக விவாதிக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் நாட்டின் இறையாண்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்தவொரு ஒப்பந்தத்திலும் அரசாங்கம் கையெழுத்திடாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான கடந்த அரசாங்கத்தின் அமைச்சரவை, 480 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான அமெரிக்காவின் மிலேனியம் சவால்கள் நிறுவனத்தின் கொடைக்கு அங்கீகாரம் வழங்கியிருந்தது.
இதற்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டால், அரச மற்றும் தனியார்துறையில் அடையாளம் காணப்பட்ட தேவைகளுக்கு நிதியளிப்பதன் மூலம் குறைந்தது 11 மில்லியன் இலங்கையர்களுக்கு பயனளிக்கும் என்று இலங்கை ஆதரவை கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.