அமைந்துள்ள நைஜரில் பயங்கரவாதிகள் நடத்திய கோரத் தாக்குதலில் இராணுவ வீரர்கள் 71 பேர் உயிரிழந்துள்ளனர்.
நைஜரின், உவால்லம் பகுதியில் முகாமிட்டிருந்த இராணுவ வீரர்கள் மீது பயங்கரவாதிகள் நேற்று (புதன்கிழமை) மாலை கடும் தாக்குதல் நடத்தியதிலேயே இந்த உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளன.
உயிரிழந்தவர்கள் குறித்து அறிவித்த நைஜரின் இராணுவ செய்தித் தொடர்பாளர் பவுக்கர் ஹசன், 10 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தெரிவித்தார்.
குறித்த பகுதிகளில் ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய இயக்கத்தினரின் நடமாட்டம் அதிகமாக உள்ள நிலையில் அவர்களே இந்தத் தாக்குதலை நடத்தியிருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே மாலி, நைஜர், புர்கினா பாசோ போன்ற ஒரு சில ஆப்பிரிக்க நாடுகளில் பயங்கரவாதிகள் நடமாட்டமும் தாக்குதல்களும் அதிகரித்து வருகின்றன.
நாட்டின் எல்லைப் பகுதிகளில் பயங்கரவாதிகள் நடமாட்டத்தைக் கண்காணித்து அவர்களை ஒடுக்குவதற்காக நைஜர் இராணுவம், அண்டை நாடான மாலி இராணுவத்துடன் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளது. மேலும், ஆப்பிரிக்க நாடுகளில் பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்கு உதவியாக பிரான்ஸ் தனது இராணுவ வீரர்களை அந்நாடுகளுக்கு அனுப்பியுள்ளது.
இதேவேளை, பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் ஒரு சில தினங்களில் புர்கினா பாசோவின் சேஹல் பகுதியில் பிரான்ஸ் இராணுவத்தின் பங்கு குறித்து மேற்கு ஆப்பிரிக்கத் தலைவர்களைச் சந்தித்துப் பேசவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.