பல்வேறு தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், ‘சம்பவம்’ படத்தின் இயக்குநர் ரஞ்சித் பாரிஜாதம் விளக்கமளித்துள்ளார்.
ஸ்ரீகாந்த் மற்றும் நடன இயக்குநர் தினேஷ் இருவரும் இணைந்து நடித்துவரும் படம் ‘சம்பவம்’. ஷாலோம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துவரும் இந்தப் படத்தை, ரஞ்சித் பாரிஜாதம் இயக்கி வருகிறார்.
இதில் பூர்ணா, சிருஷ்டி டாங்கே, பேபி ஸ்ருதிகா, கிஷோர், இயக்குநர் வெங்கடேஷ், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்துக்கு ‘சம்பவம்’ எனப் பெயரிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. இதைவைத்து, விஜய் ரசிகர்களும் அவர்களுடைய ரசனைக்கு ஏற்ப போஸ்டர் வடிவமைப்பை வெளியிட்டனர். இந்த போஸ்டர்கள், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
இந்த விவகாரம் தொடர்பாக ‘சம்பவம்’ படத்தின் இயக்குநர் ரஞ்சித் பாரிஜாதம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், ‘சம்பவம்’ என்ற படத்தை இயக்கி வருகிறேன். ஸ்ரீகாந்த், நடன இயக்குனர் தினேஷ், பூர்ணா, சிருஷ்டி டாங்கே ஆகியோர் நடிக்கின்றனர். ‘சம்பவம்’ என்ற தலைப்பை முறையாகப் பதிவுசெய்து படப்பிடிப்பை நடத்தி வருகிறோம்.
ஆனால், விஜய் நடிப்பில் உருவாகி வரும் படத்துக்கு ‘சம்பவம்’ என்று பெயர் வைத்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இது எங்கள் படக்குழுவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ‘சம்பவம்’ என்ற தலைப்பு எங்களுக்குச் சொந்தமானது. அதனால், விஜய் படம் பற்றி வரும் வதந்திகளை நம்பாதீர்கள்” என கூறியுள்ளார்.
தற்போது ‘தளபதி 64’ என்று அழைக்கப்பட்டு வரும் விஜய் படத்தில், அவருக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க, அர்ஜுன் தாஸ், சாந்தனு, விஜே ரம்யா, கௌரி கிஷண், ஸ்ரீநாத், சஞ்சய், ஸ்ரீமன் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
சேவியர் பிரிட்டோ தயாரித்துவரும் இந்தப் படத்துக்கு, அனிருத் இசையமைக்கிறார். அடுத்த ஆண்டு (2020) ஏப்ரல் மாதம் படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளமை குpப்பிடத்தக்கது.