சிறைத்தண்டணை அனுபவித்து வரும் நளினியும் அவரது கணவன் முருகனும் 5 ஆவது நாளாக இன்று (திங்கட்கிழமை) உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று கடந்த 28 ஆண்டுகளாக வேலூர் பெண்கள் தனிச்சிறையில் தண்டனை அனுபவித்து வரும் நளினி கடந்த 28ஆம் திகதி முதல் சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார்.
தனது விடுதலையில் தாமதம் மற்றும் அவரது கணவர் முருகனின் தந்தை உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார்.எனவே சிகிச்சைக்காக அவரது தந்தை சென்னை வரும்போது அவரைக் கவனித்துக்கொள்ள பரோல் கேட்டு அதிலும் தாமதம் என சில காரணங்களை முன்வைத்தே அவர் இந்த உண்ணாவிரதத்தை மேற்கொண்டுள்ளார்.
மேலும் தன்னை கருணைக் கொலை செய்யக்கோரி பிரதமருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ள நிலையில் சாகும்வரை உண்ணாவிரதத்தை மேற்கொண்டு வருகிறார்.
அத்துடன் வேலூர் சிறையில் நளினி மற்றும் அவரது கணவர் முருகன் ஆகிய இருவரும் துன்புறுத்தப்படுவதால், தங்களை புழல் சிறைக்கு மாற்றக்கோரியிருந்தார். அதனை சிறை நிர்வாகம் மறுத்துவிட்டது.
இதனால் தங்கள் இருவரையும் பெங்களூர் சிறை அல்லது வேறு மாநில சிறைக்கு மாற்றக்கோரி தமிழக உள்துறைச் செயலாளருக்கு மனுவொன்றையும் அவர் அனுப்பியுள்ளார்.
அதேபோன்று ஆண்கள் மத்திய சிறையிலுள்ள முருகனும் கடந்த 5 நாட்களாக உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் நளினி மற்றும் முருகனிடம் சிறை துறையினர் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.