தொடர்ந்து பனியை இழந்தால், ஒவ்வொரு ஆண்டும் சுமார் 400 மில்லியன் மக்கள் கடலோர வெள்ளத்திற்கு ஆளாக நேரிடும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
கிரீன்லாந்து பனிக்கட்டி கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் இருந்ததை விட ஏழு மடங்கு வேகமாக உருகி வருவதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.
இந்த பனி இழப்பின் காரணமாக 1992 முதல் உலக கடல் மட்டங்கள் சுமார் 10.6mm உயர்ந்துள்ளது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கிரீன்லாந்தில் இருந்து மட்டும் இந்த நூற்றாண்டின் இறுதியில் கூடுதலாக 7cm கடல் உயர்வு எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய விகிதத்தில் இழப்பு தொடர்ந்தால், ஒவ்வொரு ஆண்டும் நூற்றாண்டின் இறுதிக்குள் சுமார் 400 மில்லியன் மக்கள் கடலோர வெள்ளத்திற்கு ஆளாக நேரிடும்.
இந்த எண்ணிக்கை காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச அரசு குழு (ஐபிபிசி) கணித்த எண்ணிக்கையை விட 40 மில்லியன் அதிகமானதாகும்.
உலகின் இரண்டாவது பெரிய பனிப் பிரதேசமான கிரீன்லாந்து 1992 ஆம் ஆண்டு முதல் 3.8 டிரில்லியன் டன் பனியை இழந்துள்ளதாக உலகெங்கிலும் உள்ள 96 துருவ விஞ்ஞானிகள் அடங்கிய குழுவினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
1990 களில் ஆண்டுக்கு 33 பில்லியன் டன் ஆக இருந்த பனி இழப்பு வீதம் தற்போது ஆண்டுக்கு 254 பில்லியன் டன் ஆக அதிகரித்துள்ளதாகவும் இது கடந்த மூன்று தசாப்தங்களுக்குள் ஏழு மடங்கு அதிகரிப்பைக் குறிக்கிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.