சூரிய கிரகணம் தெரிவதால் அதை பாா்ப்பதற்கு கொடைக்கானலிலுள்ள இந்திய வான் இயற்பியல் மையத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொடைக்கானலில் உள்ள இந்திய வான் இயற்பியல் மைய ஆராய்ச்சி நிலையத்தின் முதன்மை விஞ்ஞானி செல்வேந்திரன் இது குறித்த தகவல்களை நேற்று (புதன்கிழமை) வழங்கியிருந்தார்.
இது குறித்து விளக்கமளித்த அவர், “எதிர்வரும் 26ஆம் திகதி நிகழவிருக்கும் நெருப்பு வளைய சூரிய கிரகணமானது கேரளாவில் தொடங்கி தென் தமிழக பகுதிகளான கோவை, பொள்ளாச்சி, திருப்பூா், திண்டுக்கல் வழியாக புதுக்கோட்டை மாவட்டம் பனங்குடி வழியாக நிறைவு பெறுகிறது. கொடைக்கானல் பகுதிகளில் முழுமையாக தெரிய வாய்ப்புள்ளது.
இந்த சூரியகிரகணமானது காலை 8.3 மணி முதல் 9.33 மணி வரை 97.3 சதவீதம் முழுமையாக சூரியனை மறைக்கிறது. அப்போது பகல் நேரமானது இரவு போல தோன்றும். பகல் 11 மணி 12 நிமிடத்தில் சூரியனைவிட்டு கிரகணம் விலகுகிறது. இவற்றை பொது மக்கள் வெறும் கண்ணால் பாா்க்க கூடாது.
இதற்காக கொடைக்கானலிலுள்ள இந்திய வான் இயற்பியல் மையத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சூரிய கிரகணத்தை பாா்க்கும் பொது மக்கள், சுற்றுலாப் பயணிகள், பள்ளி மாணவா்களுக்கு பிரத்யேகமான 10 ஆயிரம் கண்ணாடிகள் வரவழைக்கப்பட்டு வியாழக்கிழமை முதல் விற்கப்படுகின்றன” எனத் தெரிவித்தார்.