தூக்கு தண்டனை நிறைவேற்றும் சட்டமூலம் ஆந்திர சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
குறித்த சட்டமூலம் இன்று (வெள்ளிக்கிழமை) நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஹைதராபாத்தில் நடந்த கால்நடை பெண் மருத்துவா் பாலியல் வன்கொடுமை-கொலையை தொடா்ந்து ஆந்திராவில் பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்கவும், பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுபவா்களுக்கு கடுமையான தண்டனை வழங்கவும் இந்த சட்டமூலம் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, பாலியல் வன்கொடுமை வழக்கின் விசாரணையை 7 நாட்களில், முடிக்க வேண்டும். அத்துடன் குற்றம் நடந்த 14 நாட்களுக்குள் வழக்கின் நீதிமன்ற விசாரணை முற்றுப்பெற வேண்டும்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் 21 நாட்களுக்குள் குற்றவாளிகளுக்கு துாக்கு தண்டனை நிறைவேற்ற வேண்டும். சமூக வலைதளங்களில் பெண்களை கீழ்த்தரமாக சித்தரிக்கப்படும் பதிவுகளுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் இந்த சட்டமூலத்தின் கீழ் வழங்கப்படும்.
குழந்தைகள், சிறுமிகள் மீது பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவா்களுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை மற்றும் குற்றங்களுக்கு ஏற்ற வகையில் ஆயுள் தண்டனை, பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரிக்க மாவட்டத்திற்கு ஒன்றென 13 சிறப்பு நீதிமன்றங்களும் இதன்கீழ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.