வீடுகளின் சுவர் இடிந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கான இழப்பீட்டுத் தொகை 10 இலட்சம் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழநிசாமி தெரிவித்துள்ளார்.
குறித்த பகுதிக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) சென்ற அவர் உயிரிழந்தோரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்த விஜயத்தின்போது துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் பலர் உடனிருந்தனர்.
செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர், “17 பேர் இறந்தமை வேதனையளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிக்கிறேன்.
சுற்றுச்சுவர் கட்டிய சிவசுப்பிரமணியன் கைது செய்யப்பட்டிருக்கிறார். சட்ட ரீதியாகவே இந்த விவகாரத்தை அணுக முடியும். சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்.
சுவர் இடிந்து வீழ்ந்து உயிரிழந்த 17 பேரின் குடும்பங்களுக்கு மேலும் தலா ரூ.6 இலட்சம் இழப்பீடு வழங்கப்படும். இதன்படி, உயிரிழந்தோர் குடும்பத்துக்கு இழப்பீட்டுத் தொகை ரூ.10 இலட்சம் ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
அத்துடன் குடும்பத்தில் ஒருவருக்கு தகுதிக்கேற்ப அரசு வேலை வழங்கப்படும். மேட்டுப்பாளையம் நடூரில் வீடுகளை இழந்தோருக்கு புதிய வீடுகள் கட்டித் தரப்படும்.
அந்தப் பகுதியில் பாதுகாப்பற்ற முறையில் உள்ள வீடுகளில் வசிப்போருக்கும் புதிய வீடுகள் கட்டித்தரப்படும். இந்த சம்பவத்தை வைத்து அரசியல் செய்ய வேண்டாம்” எனத் தெரிவித்துள்ளார்.