ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கருதுவது அவர் மீதான நம்பிக்கையை இழக்கச் செய்கிறதென மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்தார்.
அத்தோடு பெரும்பான்மை மக்களின் வாக்குகளால் மாத்திரமே அவர் வெற்றிபெற்றார் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாதென்றும் அவர் தெரிவித்தார்.
மட்டு. ஊடக அமையகத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
“ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ சிறுபான்மை மக்களின் வாக்குகளைப் பெறாமல் வெற்றி பெற்றவர் என்ற கருத்து காணப்படுகின்றது.
அது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத கருத்து. ஏனெனில் அவர் பெரும்பான்மை மக்களின் கணிசமான வாக்குகளைப் பெற்றுகொண்டாலும் சிறுபான்மை மக்களின் 7 வீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றதன் மூலம் தான் 52 வீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றார்.
எனவே சிறுபான்மை வாக்குகளை முற்றாகப் பெறாமல் வெற்றி பெற்றார் என்று கூற முடியாது.
ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின்போது 13வது திருத்தம் பற்றியே இந்தியா சொல்லியிருக்கின்றது. இது ஒரு முழுமையான தீர்வு இல்லாது விட்டாலும்கூட அதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என்கின்ற விடயத்தில் காணி, பொலிஸ் அதிகாரங்கள் அதில் மிக முக்கியமாக இருக்கின்றன.
அத்துடன் நிதி அதிகாரங்கள் குறைவாக இருக்கின்றமை, ஆளுநரின் அதிகாரம் முதலமைச்சரின் அதிகாரத்தைவிட உயர்ந்து காணப்படுகின்ற நிலை போன்றவை காணப்படுகின்றன.
இவ்வாறான நிலைமைகளைத் தவிர்த்து முழுமையான அதிகாரப் பகிர்வினை வழங்குகின்ற போதுதான் அது சாத்தியப்படுமே தவிர நடைமுறைச்சாத்தியமற்ற விடயம் என்று ஜனாதிபதி 13வது திருத்தத்தைக் கருதுவது என்பது தமிழ் மக்கள் அவர் மீது மேலும் நம்பிக்கையை இழக்கச் செய்யும் செயற்பாட்டுக்கு அவர் செல்லுகின்றாரோ என்றே சிந்திக்கத் தோன்றுகின்றது” என மேலும் தெரிவித்தார்.