பொலிஸார் – வழக்கறிஞர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் வழக்கறிஞர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
அத்தோடு பொலிஸ் வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டதால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
டெல்லியில் உள்ள திஸ் ஹசரி நீதிமன்ற வளாகத்தில் பல்வேறு நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன.
இதனால், ஏராளமான பொதுமக்கள் வழக்கறிஞர்கள் மற்றும் பொலிஸார் அங்கு வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், இன்று (சனிக்கிழமை) நீதிமன்ற வளாகத்தில் டெல்லி பொலிஸார் மற்றும் வழக்கறிஞர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
இதன்போது நீதிமன்ற வளாகத்தில் இருந்த பொலிஸாரின் வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன.
அதன்பின்னர் பொலிஸார் மேற்கொண்ட தாக்குதலில் வழக்கறிஞர் ஒருவர் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச்சூடு நடந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் குறித்த பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மோதலுக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. இருப்பினும் வழக்கறிஞர்கள் தொலைபேசி பயன்படுத்த பொலிஸார் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் இதனால் ஆவேசமுற்ற வழக்கறிஞர்கள் பொலிஸாருடன் மோதலில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.