அரசியல் கலாசாரத்துக்கு முடிவுகட்டி, புதிய மாற்றத்தை ஏற்படுத்தவே அரசியலுக்கு வந்திருப்பதாக தேசிய மக்கள் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க தெரிவித்தார்.
எனவே, நான் முன்வைத்த காலை பின் வைக்க மாட்டேன் எனவும் மக்கள் தன்னை நம்பலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குருணாகல் பிரதேசத்தில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அத்துடன் “கடந்த ஏப்ரல் தாக்குதலுக்குப் பின்னர் முஸ்லிம் மக்களுக்கு எதிராக ஏற்பட்ட பிரச்சினையின் போது தேரர் ஒருவர் முன்னின்று செயற்பட்டார். உண்ணாவிரதம் இருந்தார்.
அவர் யாருக்கு எதிராக உண்ணாவிரம் இருந்தாரோ அவர்கள் இருவரும் இன்று ஒரே அணியில் இருக்கின்றனர். இவர்களில் யாரை வணங்குவதென்று தெரியவில்லை. இதுதான் இன்றைய நிலைமை.
எனவே இந்த மோசமான அரசியல் கலாசாரத்தை மாற்றியமைத்து, நாட்டை பொருளாதாரத்தில் முன்னேற்றமடையச் செய்ய என்னுடன் கைகோர்க்க முன்வரவேண்டும். கட்சி சார்ப்பற்ற தலைவர் ஒருவரினாலேயே நாட்டை கட்டியெழுப்பலாம். அதனாலேயே நான் எந்த கட்சியையும் சாராமல் பொது வேட்பாளராக களமிறங்கியுள்ளேன்” என அவர் கூறினார்.