ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவளிப்பதாக ஜனநாயக போராளிகள் கட்சி அறிவித்துள்ளது.
அக்கட்சியின் தலைமைச் செயலகத்தினால் இன்று (வியாழக்கிழமை) ஊடக பேச்சாளர் க.துளசியின் பெயரிட்டு வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியினை தெரிவு செய்யும் தேர்தல் ஒன்றினை நாம் விரைவில் எதிர்கொள்ள இருக்கிறோம்.
யுத்தத்தின் பின்னரான கடந்த பத்து ஆண்டுகளில் தற்போது ஏற்பட்டிருக்கும் அரசியல் அனுகூலத்தினை தமிழினம் பயன்படுத்திகொள்ள வேண்டிய ஒரு அவசியமான தேர்தலாகவே இதனை நாம் கருதுகிறோம்.
தமிழர்களது வாக்குகளே இதுவரையில் ஜனாதிபதியை தீர்மானிக்கும் ஆதிக்க சக்தியாக இருந்து வந்துள்ளது. அது வாக்களிப்பின் ஊடாகவும் வாக்களிப்பை தவிர்ப்பதன் ஊடாகவும் இடம்பெற்றுள்ளன.
அந்த வகையில் பல வேட்பாளர்கள் இத்தேர்தல் களத்திற்கு வந்திருந்தாலும் இரு வேட்பாளர்களுக்கு இடையிலேயே போட்டிகள் உச்சம் பெறுகிறது.
எமது வாக்குபலத்தினை சரியான முறையில் உச்ச அளவில் பிரயோகிப்பதன் ஊடாகவே எமது எதிர்கால நலன்கள், அதிகாரப்பங்கீடு, அரசியல் கைதிகளது விடுதலை மற்றும் கடந்த காலங்களில் ஏற்பட்டிருக்கும் இயல்பு நிலைமை என்பனவற்றை தற்காத்துகொள்ளும் வகையில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.
சர்வதேச மற்றும் பிராந்திய அரசுகளுடன் இசைந்து செல்லதக்க சட்டத்தின் ஆட்சியினை மதித்து. நிலைநிறுத்தக்கூடிய குறிப்பாக குடும்ப ஆட்சி முறைக்கு முற்றுப்புள்ளி வைத்து செயலாற்றகூடியவராக நாங்கள் சஜித் பிரேமதாசாவை கருதுகிறோம்.
அவ்வகையில் ஜனநாயக போராளிகள் கட்சியினர் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசாவை ஆதரிக்கின்றோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது