இரண்டாவது ரி-20 போட்டியில், அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணி, 7 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.
முதல் போட்டி மழைக் காரணமாக கைவிடப்பட்டிருந்த நிலையில், இந்த வெற்றியின் மூலம், அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரில், 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
கேன்பர்ரா மைதானத்தில் இன்று நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதன்படி முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, ஆரம்பமே சற்று தடுமாற்றத்தை எதிர்கொண்டது.
அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான பாபர் அசாம் மற்றும் பகர் சமான் ஆகியோர் இணைந்து 22 ஓட்டங்களை ஆரம்ப விக்கெட்டுக்காக இணைப்பாட்டமாக பகிர்ந்துக் கொண்டனர்.
இதன்போது, பகர் சமான் 2 ஓட்டங்கள் பெற்றிருந்த வேளை ஆட்டமிழந்து வெளியேற, அடுத்து களமிறங்கிய ஹரிஸ் சொஹைல் 6 ஓட்டங்களுடன் ஏமாற்றினார்.
தொடர்ந்து களமிறங்கிய மொஹமட் ரிஸ்வான் 14 ஓட்டங்களுடனும், அஷிப் அலி 4 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.
இதன்பிறகு களமிறங்கிய இப்தீகார் அஹமட், ஆரம்ப துடுப்பாட்ட வீரரான பாபர் அசாமுடன் இணைந்து 36 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்திருந்த வேளை, பாபர் அசாம் 50 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார்.
இதனையடுத்து களமிறங்கிய இமாட் வசிம், இப்தீகார் அஹமட்டுடன் ஜோடி சேர்ந்து 40 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்திருந்த வேளை, இமாட் வசிம், 11 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார்.
இப்தீகார் அஹமட் ஆட்டமிழக்காது 62 ஓட்டங்களுடனும், வஹாப் ரியாஸ் ஓட்டமெதுவும் பெறாத நிலையிலும் களத்தில் இருக்க, பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 150 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
அவுஸ்ரேலியா அணியின் பந்துவீச்சில், அஷ்டன் அகர் 2 விக்கெட்டுகளையும், கேன் ரிச்சட்சன், பெட் கம்மின்ஸ் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத் தொடர்ந்து 151 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய அவுஸ்ரேலியா அணி, 30 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை, தனது முதல் விக்கெட்டை இழந்தது.
அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான டேவிட் வோர்னர் மற்றும் ஆரோன் பின்ஞ் ஆகியோர் 30 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றிருந்த வேளை, டேவிட் வோர்னர் 20 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இதனையடுத்து களமிறங்கிய ஸ்டீவ் ஸ்மித், ஆரோன் பின்ஞ்சுடன் ஜோடி சேர்ந்து 18 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்துக் கொண்ட வேளை, ஆரோன் பின்ஞ், 17 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இதன்பிறகு களமிறங்கிய பென் மெக்டர்மோட் 21 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேறினார்.
ஸ்டீவ் ஸ்மித் 80 ஓட்டங்களுடனும், அஷ்டன் டர்னர் 8 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது களத்தில் இருக்க, 18. 3ஓவர்கள் நிறைவில், மூன்று விக்கெட்டுகள் இழப்புக்கு அவுஸ்ரேலியா அணி வெற்றி இலக்கை கடந்தது. இதனால் அவுஸ்ரேலியா அணி 7 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.
பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சில், மொஹமட் இர்பான், இமாட் வசிம் மற்றும் மொஹமட் ஆமிர் ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக, 51 பந்துகளில் 1 சிக்ஸர் 11 பவுண்ரிகள் அடங்களாக, ஆட்டமிழக்காது 80 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட ஸ்டீவ் ஸ்மித் தெரிவு செய்யப்பட்டார்.
மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரின், மூன்றாவதும் இறுதியுமான ரி-20 போட்டி எதிர்வரும் 8ஆம் திகதி பெர்த் மைதானத்தில் நடைபெறவுள்ளது