பிரேமேதாசவின் வெற்றியில் மலையக பெண்களின் பங்களிப்பு கட்டாயம் இருக்கும் என அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தற்போது கிடைக்கபெற்ற தகவல்களும் புள்ளி விபரங்களும் வெளிநாடுகளின் முன்னணி கணிப்பீட்டுக்கு அமைய சஜித் பிரேமதாசவின் வெற்றி நிச்சயிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சஜித் பிரேமதாசவை ஆதரிக்கும் ‘ஒன்றாய் முன்னோக்கி’ என்ற தொனிப்பொருளிலான மலையக மக்கள் முன்னணியின் மகளிர் அணியுடனான மாபெரும் ஒன்று கூடல் இன்று (புதன்கிழமை) ஹற்றனில் அமைந்துள்ள மலையக மக்கள் முன்னணியின் தலைமைக் காரியாலத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், “மலையத்தில் பெருந்தோட்டங்களில் காணப்படும் வாக்கு வங்கியில் பெரும்பாலன வாக்குகள் பெண்களுக்கு உரியதே. இந்த வாக்குகள் அனைத்தும் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு அளிக்கப்பட வேண்டும்.
சஜித் பிரேமதாச, இந்த நாட்டில் வாழும் அனைத்து பெண்களின் பாதுகாப்பிற்கும் நல்வாழ்விற்கும் மிகவும் பொருத்தமான பெண்கள் சாசனம் ஒன்றினை தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவித்துள்ளார்.
பெண்களின் உரிமை உட்பட பெண்கள் சார்பான நல்ல பல சமூகசார் அபிவிருத்தி விடயங்களையும் முன்வைத்துள்ளார். இந்த நாட்டில் உள்ள சனத்தொகையில் 51 வீதமானோர் பெண்களே.
ஆனால் இவர்கள் குறித்து கடந்த காலங்களில் பதவியில் இருந்த ஜனாதிபதிகள் உரிய கவனத்தை செலுத்தவில்லை என்றுதான் கூற முடியும். பேச்சுகளுக்கு பலர் பல கூறினாலும் அவை நடைமுறையில் இருப்பதாகத் தெரியவில்லை.
இந்த நாட்டிற்கு பெருமளவிளான வருமானத்தை பெற்றுத் தருபவர்கள் பெண்களே. இலங்கையை பொறுத்த வரையில் உயர் பதவிகளுக்கு வருபவர்கள் பெண்கள் அபிவிருத்தி தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும். அந்த வகையில் சஜித் பிரேமதாச பெண் அபிவிருத்தி குறித்து முன்னெடுக்கப்படவுள்ள செயற்திட்டங்கள் பாராட்டதக்கதாகும்.
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் எண்ணிக்கையில் 60 விகிதத்திற்கு மேற்பட்டவர்கள் பெண்கள். இவர்கள் தங்கள் வாழ்வில் பல துயரங்களை அடைந்து வருகின்றனர்.
இவர்களின் அபிவிருத்தி தொடர்பாக ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் பெண்கள் தொடர்பான இணைய குற்றங்களில் இருந்து பெண்களையும் குழந்தைகளையும் பாதுகாக்க புதிய சட்டங்களையும் உருவாக்கவுள்ளார்” என தெரிவித்துள்ளார்.