வரலாற்றில் ஒரு பொன்னான தருணம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
அயோத்தி தீர்ப்பு குறித்து பிரதமர் மோடி இன்று (சனிக்கிழமை) மாலை நாட்டு மக்களிடம் உரையாற்றினார்.
இதன்போது அவர் கூறியதாவது, “நாடே எதிர்பார்த்த வழக்கில் தீர்ப்பு வந்துள்ளது. என் மனதில் இருப்பதை நாட்டு மக்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியானது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தருணம். நீதி, நியாயம் மீது மக்களுக்கு நம்பிக்கை வலுப்பெற்றுள்ளது.
மாரத்தான் விசாரணைக்குப் பின்பு தீர்ப்பு வந்துள்ளது. ஒட்டுமொத்த தேசமும் இந்த தீர்ப்பை ஏற்றுக் கொண்டுள்ளது. வேற்றுமையில் ஒற்றுமையே நமது தாரக மந்திரம்.
மக்களாட்சி வலிமையாக தொடர்கிறது என்பதை இந்தியா காட்டியுள்ளது. நமது ஜனநாயகம் எவ்வளவு வலுவானது என்பதை உலகம் கண்டுள்ளது.
இந்தியாவின் வலிமையான அமைப்பு உச்ச நீதிமன்றம் என்பது இன்று மீண்டும் நிரூபணம் ஆகியுள்ளது. கர்தார்பூரில் புதிய வழித்தடம் திறக்கப்பட்டுள்ளது போல், இங்கேயும் புதிய பாதை திறக்கப்பட்டுள்ளது.
அயோத்தி வழக்கில் அளிக்கப்பட்டுள்ள தீர்ப்பை அனைவரும் ஏற்றுள்ளமை இந்தியாவின் சகிப்புத் தன்மையை உணர்த்துகிறது.
புதிய இந்தியாவில் எதிர்மறை எண்ணங்களுக்கு இடமில்லை. வேற்றுமையும் எதிர்மறை எண்ணங்களும் மறைந்த தினம் இன்று. தேசத்தை கட்டமைக்கும் பொறுப்பு ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு” என தெரிவித்துள்ளார்.