சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் எதிர்வரும் டிசம்பர் 5 ஆம் திகதி நடைபெறுவதையொட்டி இன்று மனுத்தாக்கல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மதசார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணி ஆட்சியிலிருந்தபோது அப்போதைய முதலமைச்சர் குமாரசாமி தனது அரசின் மீது சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார்.
அதில் காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தள சட்டமன்ற உறுப்பினர்கள் 17 பேர் கலந்து கொள்ளாததால், அரசு கவிழ்ந்தது. இதனால் விதிகளை மீறியதாக 17 பேரையும் சபாநாயகர் தகுதிநீக்கம் செய்தார்.
இதனிடையே, 15 தொகுதிகளுக்கு கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட இடைத் தேர்தல் எதிர்வரும் டிசம்பர் 5ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இத்தகைய சூழ்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் 17 பேரும் மீண்டும் மனு தாக்கல் செய்தமையினால், தேர்தல் நடைபெறுமா என கேள்வி எழுந்தது.
இந்நிலையில் குறித்த மனு மீது எதிர்வரும் 13ம் திகதி முடிவெடுக்கப்படும் என கடந்த சனிக்கிழமை உச்ச நீதிமன்றம் அறிவித்தது.
இதையடுத்து 15 தொகுதிகளுக்கும் எதிர்வரும் டிசம்பர் 5ஆம் திகதி திட்டமிட்டபடி இடைத் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
அதற்கமையவே மனுத்தாக்கல் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது