பெண் கட்டுரையாளரும், தொலைக்காட்சி வர்ணனையாளருமான ஜீன் காரல் (வயது 75) என்பவர் கடந்த 1990 ஆம் ஆண்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கடந்த ஜூன் மாதம் நியூயார்க் மெகசினில் எழுதிய கட்டுரையில் கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.
எனினும், குறித்த பெண்ணை தான் பார்த்தது கூட இல்லை என்றும் அவர் கூறுவது முற்றிலும் பொய்யான கூற்று என்றும் ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், ஜனாதிபதி ட்ரம்ப் மீது ஜீன் காரல் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். கடந்த 1987 ம் ஆண்டு தானும், தனது கணவரும், ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ஆகியோர் சேர்ந்து எடுத்த ஔிப்படம் தன்னிடம் இருப்பதாக ஜீன் தெரிவித்துள்ளார்.
ஆனால் தன்னை பார்த்ததே இல்லை என ட்ரம்ப் கூறி தனது நற்பெயருக்கும், தொழிலுக்கும் களங்கம் ஏற்படுத்தியுள்ளார், என ஜீன் காரல் குற்றஞ்சுமத்தியுள்ளார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின்போது ஜனாதிபதி ட்ரம்ப் மீது 12-க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர்.
அவற்றிற்கு எந்த ஆதாரங்களும் இல்லை என்றும், தன்னை இழிவுபடுத்தவே முறைப்பாடுகள் தெரிவிக்கப்படுகின்றது எனக் கூறிய ட்ரம்ப், தேர்தலில் வெற்றியும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.