அரசியல் கைதிகள் பிரச்சினை, நிலப்பிரச்சினை, காணி உரிமைப் பிரச்சினை என முக்கிய பிரச்சினைகளுக்கு இரண்டு வருடங்களில் தீர்வு பெற்று தர முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னனியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவை ஆதரித்து வவுனியாவில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
தமது ஆட்சி வந்ததும் சகல பிரதேச செயலங்களுக்கும் உட்பட்ட வகையில் அனைத்து வசதிகளும் கொண்ட தேசிய பாடசாலைகளை உருவாக்குவோம் என்றும் 2025 ஆம் ஆண்டாகும் போது ஆயிரம் தேசிய பாடசாலைகளை உருவாக்க திட்டமிட்டுள்ளோம் எனவும் நாமல் ராஜபக்ஷ கூறினார்.
1983 ஆம் ஆண்டு ஜூலைக் கலவரம் முதல் 2009 வரை தீர்க்கப்படாத பல பிரச்சனைகள் இருப்பதை அறிவோம் என கூறிய நாமல் ராஜபக்ஷ அடுத்துவரும் இரண்டு வருடங்களில் இந்த பிரச்சனைகளுக்கு தீர்வினைப்பெற்றுதர முடியும் என கூறினார்.
எனவே எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் இதனை புரிந்து தமது கரத்தை பலப்படுத்துமாறு நாமல் ராஜபக்ஷ கேட்டுக்கொண்டார்.