தொடர்பாடல் புரட்சிக்கும் ஈடுகொடுத்து பெற்றோர், பிள்ளைகளை வழிநடத்த வேண்டும். இல்லையேல் ஒன்றுமறியாதவர்களாக இருந்தால் நெறிப்படுத்தலில் சறுக்கல் ஏற்படும் என துறைசார்ந்த வளவாளர் எஸ்.சக்திவேல் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். எஸ்.சக்திவேல் மேலும் கூறியுள்ளதாவது, “சமகாலப் போக்கில் நவீன தகவல் தொழிநுட்ப யுகத்தில் எதுவுமே தெரியாத புரியாதவர்களாக பெற்றோர் இருந்தால் அவர்களை சிறந்த முறையில் வளர்த்தெடுப்பதற்கு முடியாமல் போய்விடும்.
மேலும் விரும்பியோ, விரும்பாமலோ பெற்றோரும் சமகால தகவல் தொழிநுட்ப அணுகுமுறைகளினூடாகதான் பிள்ளைகளை நெறிப்படுத்த வேண்டியுள்ளது.
அத்துடன் ஆன்மீக வழிகாட்டலும், அறநெறிகளும், சமாதானமும், அஹிம்சையும், வன்முறைக்குப் பதிலாக நன்முறைகளும் இந்த தகவல் தொழிநுட்பப் புரட்சி ஊடாகவே இளைஞர்களிடம் கொண்டு செல்லப்பட வேண்டும் என்ற காலத்தின் கட்டாயத் தேவையுள்ளது.
எனவே, இந்த விடயத்தில் பெற்றோரும், சமயத் தலைவர்களும், சமாதான விரும்பிகளும், சமூக ஆர்வலர்களும் பின்னிற்கக் கூடாது. சமகால தகவல் தொழிநுட்ப அறிவுகளை முடிந்தளவு கற்று, இளம் சமுதாயத்தினரை அறிவூட்ட வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.