உயர்தரப் பாடசாலையின் முன்னாள் அதிபரின் பெயரிடப்பட்டு குண்டுப் புரளியை ஏற்படுத்தும் அநாமதேயக் கடிதம் தொடர்பாக யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் பி அறிக்கையைப் பொலிஸார் தாக்கல் செய்தனர்.
சம்பவம் தொடர்பாக விசாரணைகள் இடம்பெறுவதாகவும் கண்டியிலிருந்தே அந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என்று பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து வழக்கை எதிர்வரும் டிசம்பர் 3ஆம் திகதிவரை ஒத்திவைப்பதாக யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலையில் இன்னும் ஒரு மாதத்தில் குண்டு வெடிக்கும் என்று ஆங்கில மொழியில் குறிப்பிடப்பட்டு திகதியிடப்படதாத அநாமதேயக் கடிதம் ஒன்று கடந்த ஒக்டோபர் 31ஆம் திகதி கிடைக்கப்பெற்றது.
வேம்படி பாடசாலை முன்னாள் அதிபர் வேணுகா சண்முகரத்தினம் என்ற பெயரில் பாடசாலை விலாசம் இடப்பட்டு வந்துள்ள அநாமதேயக் கடிதம் தொடர்பாக அவர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கியிருந்தாரென்பது குறிப்பிடத்தக்கது.