தொடர்புடைய அனைவருக்கு எதிராகவும் தனது ஆட்சியின் கீழ் நிச்சயமாக தண்டனைக் கிடைக்கும் என்று தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
பாணந்துரையில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற பிரசாரக்கூட்டத்தில் கருத்து வெளியிட்ட அவர், தனது நிர்வாகத்தின் கீழ் பொலிஸாரை பலப்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், “ஏப்ரல் 21 ஆம் திகதி எமது நாட்டில் பாரியதொரு சம்பவமொன்று இடம்பெற்றது. இது யாரும் ஏற்றுக்கொள்ள முடியாத மிகவும் மோசமானதொரு சம்பவமாகவே வரலாற்றில் இடம்பிடித்துள்ளது.
விசேடமாக கத்தோலிக்க மக்களின் முக்கியமான திருநாளில், அந்த மக்கள் தேவாலயங்களில் வழிபாடுகளில் ஈடுபடும்போதுதான் இந்த மிலேச்சத்தனமான குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்றன.
இதனால், 250 இற்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்தார்கள். இந்த சம்பவம் இன்றுவரை மக்களிடம் ஒரு அச்ச உணர்வையே ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.
இவ்வாறானதொரு சம்பவத்தை தடுக்காதவர்கள் மற்றும் இந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் என அனைவருக்கும் எமது ஆட்சியில் நிச்சயமாக தண்டனைக் கிடைக்கும் என்பதை நான் இவ்வேளையில் உறுதியுடன் கூறிக்கொள்கிறேன்.
அத்தோடு, தங்களின் இனங்களுக்குள் தலைத் தூக்கும் அடிப்படைவாதத்தை இல்லாதொழிக்க வேண்டிய பொறுப்பும் அந்தந்த மக்களிடம்தான் காணப்படுகிறது.
இதனால் மட்டுமே, அடிப்படைவாதத்தை தோற்கடிக்க முடியும். அதைவிடுத்து, இதனை இராணுவத்தினரால் கட்டுப்படுத்த முடியாது. இது ஒன்றும் யுத்தம் கிடையாது. யுத்தமொன்று மீண்டும் ஏற்படவும் நாம் தலைத்தூக்க இடமளிக்க மாட்டோம்” என கூறினார்.