நாடுகளை அச்சுறுத்தி வரும் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் முன்னாள் தலைவன் அபுபக்கர் அல் பக்தாதி (வயது 48) கடந்த மாதம் உயிரிழந்த நிலையில், அந்த அமைப்பின் புதிய தலைவன் இருக்குமிடத்தை கண்காணித்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
பக்தாதி உயிரிழந்ததை அடுத்து அபு இப்ராஹிம் அல்-ஹாஷிமி அல்-குரேஷி என்பவர் ஐ.எஸ் அமைப்பின் புதிய தலைவனாக நியமிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்தது.
மேலும் பக்தாதி உயிரிழந்தமைக்கு உரிய பதிலடி வழங்கப்படவுள்ளதாகவும் ஐ.எஸ் அமைப்பு அமெரிக்காவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தநிலையில், ஐ.எஸ் அமைப்பின் புதிய தலைவன் இருக்கும் இடத்தை கண்காணித்து வருவதாகவும், அவர் எங்கு இருக்கிறார் என நாங்கள் அறிவோம் எனவும் ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
நியூயோர்க் பொருளாதார சங்கத்தில் உரையாற்றிய ட்ரம்ப், ‘ஐ.எஸ் அமைப்பின் தலைவர் அபூபக்கர் அல் பக்தாதி தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்தார்.
அவருக்கு அடுத்த இடத்தில் இருந்தவரையும் கொன்றுவிட்டோம். மூன்றாவதாக ஒரு தலைவர் உருவாகியுள்ளார். அவரையும் அமெரிக்கா கண்காணித்து வருகின்றது.
அவருக்கு மிகப்பெரிய சிக்கல்கள் காத்திருக்கின்றன, ஏனென்றால் அவர் இருக்கும் இடம் எங்களுக்கு தெரியும்’ என்று குறிப்பிட்டார்.
ஈராக் மற்றும் சிரியா நாடுகளில் இன்னும் ஐ.எஸ் பயங்கரவாதிகள் அதிகமாக பரவியுள்ளனர், அவர்கள் மீது தாக்குதல் தொடரும் என்றும் அமெரிக்க ராணுவ அதிகாரிகள் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது