உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அலுவலகம் வரும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வில் இடம்பெற்றிருந்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் உள்ளிட்ட 3 நீதிபதிகள் ஒருமித்த தீர்ப்பை இன்று (புதன்கிழமை) அளித்தனர். இரண்டு நீதிபதிகள் வேறுபட்ட தீர்ப்பை அளித்துள்ளனர்.
நீதித் துறையின் வெளிப்படைத் தன்மையை நிலை நிறுத்தும் வகையில் உச்ச நீதிமன்றம் இன்று இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அலுவலகம் வரும் என டெல்லி உயர் நீதிமன்றம் பிறப்பித்த தீரப்பை எதிர்த்து உச்ச நீதிமன்ற செயலாளர், தகவல் தொடர்பு அதிகாரி ஆகியோர் செய்த மேன்முறையீட்டு வழக்கில் இன்று இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பின் மூலம், டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்.
தகவல் அறியும் உரிமை சட்ட வரம்புக்குள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அலுவலகம் இடம்பெறும் என டெல்லி உயர் நீதிமன்றம் கடந்த 2010இல் தீர்ப்பு வழங்கியிருந்தது. 88 பக்கங்கள் கொண்ட அந்தத் தீர்ப்பில், ‘நீதித்துறை சுதந்திரம் என்பது ஒரு நீதிபதிக்கு அளிக்கப்பட்ட சிறப்பு உரிமை அல்ல. அது அவருக்கு அளிக்கப்பட்ட பொறுப்பு” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்தத் தீர்ப்பானது, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தொடா்பான விவரங்களை வெளியிட வேண்டிய அவசியமில்லை என்ற நிலைப்பாடு கொண்ட அப்போதைய தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணனுக்கு பின்னடைவாக கருதப்பட்டது.
டெல்லி உயர் நீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதிகள் விக்ரம்ஜித் சென், எஸ்.முரளிதர் ஆகியோர் அடங்கிய அமர்வு மேற்கண்ட தீர்ப்பை வழங்கியிருந்தது.
இந்நிலையில், டெல்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்ற தலைமைச் செயலர் மற்றும் அதன் மத்திய பொதுத் தகவல் அதிகாரி ஆகியோர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேன் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்கள் மீதான வாதங்கள் நிறைவடைந்த நிலையில், தீர்ப்பை ஒத்திவைப்பதாக தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு கடந்த ஏப்ரல் 4ஆம் திகதி தெரிவித்திருந்தது.
முன்னதாக, இந்த வழக்கில் தகவல் அறியும் உரிமை ஆர்வலர் எஸ்.சி.அகா்வால் சார்பில் வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் ஆஜராகி வாதாடினார்.
அவா் கூறுகையில், ‘அரசின் அமைப்புகளில் வெளிப்படைத் தன்மை உறுதி செய்யப்பட வேண்டும் என்ற வலுவான நிலைப்பாட்டை கொண்டுள்ள உச்ச நீதிமன்றம், தனது விடயத்திலும் அதே கவனத்தை செலுத்துவதிலிருந்து விலக இயலாது.
நீதித் துறையின் சுதந்திரம் என்பது பொதுமக்களின் கண்காணிப்பிலிருந்து கிடைக்கும் சுதந்திரம் என்று அா்த்தமாகிவிடாது. அரசு அமைப்புகள் எவ்வாறு செயல்பட்டுகொண்டிருக்கின்றன என்பதை அறியும் உரிமை மக்களுக்கு உள்ளது. நீதிபதிகளின் நியமனம் தொடா்பாக உச்சநீதிமன்ற கொலீஜியத்தில் நடைபெறும் விவாதங்கள் ஆா்டிஐ சட்டத்தின்கீழ் வெளியிடப்பட வேண்டும்’ என்று வாதிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.