றோயல் பார்க் கொலை தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட மரண தண்டனை கைதிக்கு பொதுமன்னிப்பு வழங்கிய முடிவு தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெளிவுபடுத்தியுள்ளார்.
இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த ஜனாதிபதி, மூன்று மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் பரிந்துரைகளின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்ததாக மூத்த அமைச்சர் ஒருவர் தெரிவித்தார்.
இதேவேளை ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்தன தேரர், மதத் தலைவர்கள் சிவில் அமைப்புக்கள், முன்னாள் நீதிபதிகளின் வேண்டுகோளின் பேரில் குற்றவாளிக்கு பொதுமன்னிப்பு வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த 2005 ஆம் ஆண்டு ராஜகிரியாவில் உள்ள ராயல் பார்க் வீட்டு வளாகத்தில், யுவோன் ஜோன்சன் என்ற 19 வயதான சுவீடன்-இலங்கை வம்சாவளி யுவதியொருவர் ரோயல் பார்க் என்ற அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து கீழே தள்ளி விழுத்தி கொல்லப்பட்டார்.
குறித்த கொலை சம்பவம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட ஜூட் ஸ்ரீமந்த ஜெயமஹவேயை பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்வதாக ஜனாதிபதி அறிவித்திருந்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக் காலம் நிறைவடைவதற்கு இன்னும் ஒரு வாரம் மாத்திரமே எஞ்சியுள்ள நிலையில், கொலை குற்றம் புரிந்த குற்றவாளியொருவரை பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்துள்ளமை பல தரப்பினரின் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.