LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Thursday, November 7, 2019

போவதற்கு இடமின்றி நான் அரசியலுக்கு வரவில்லை – கமல்

போவதற்கு இடமின்றி நான் அரசியலுக்கு வரவில்லை என மக்கள் நீதி மையத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் பரமக்குடியில் இன்று (வியாழக்கிழமை) தனது தந்தை சீனிவாசனின் சிலையை திறந்துவைத்து உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், “நான் சினிமா துறைக்கு வந்தபோது எனது தந்தை நீ மாலைநேர கல்லூரியில் படித்து ஐ.ஏ.எஸ். ஆகலாம் என கூறினார். அதற்கு நான் முதலில் எஸ்.எஸ்.எல்.சி. சித்தியடைய வேண்டும். அதன் பிறகுதான் மற்றதெல்லாம் என்றேன்.

அய்யா பாலச்சந்தர் எனக்கு ஒரு ஏற்பாடு செய்துள்ளார். அங்கு நான் சென்று கொள்கிறேன். படிப்பு எனக்கு வராது எனக் கூறினேன். இதனை கேட்ட எனது தந்தை கொஞ்சம் மனத்தளர்வோடு நீ சங்கீதமாவது கற்றுக்கொள் என்றார். அவர் கூறியது ஏன் என்று புரியவில்லை.

ஆனால் அவர் ஒரு கலாரசிகன் என்பதற்கு சான்றாக எங்கள் குடும்பத்தில் சகோதரியும், பலரும் கலைத்துறையில் சிறப்பாக செயற்பட்டு வருகிறார்கள்.

எங்கள் குடும்பம் அற்புதமான குடும்பம். அதன் நிஜத்தலைமை பொறுப்பை வகித்தவர் எனது தந்தை. அவரிடம் இருந்துதான் நான் நகைச்சுவையையும், பிறவற்றையும் கற்றுக் கொண்டேன்.

எனக்கு ரௌத்திரமும் பிடிக்கும், நகைச்சுவையும் பிடிக்கும். எனக்கு எது வருகிறதோ அதை செய்கிறேன். கமல்ஹாசனுக்கு படிப்பு தெரியுமா என்றால் தெரியாது. ஆனால் “ஸ்கில்” தெரியும். அதை வைத்து தான் மேடையில் பேசி வருகிறேன்.

நான் சென்னை சென்ற பிறகு எனக்கு நிழலாக நின்ற இயக்குநர் கே.பாலச்சந்தருக்கு எனது அலுவலகத்தில் சிலை திறக்கிறேன். அது ஊருக்காக அல்ல, எனக்காக. பூஜை செய்வதற்காக அந்த சிலைகள் வைக்கப்படவில்லை.

நான் அரசியலுக்கு வருவதை எனது குடும்பத்தில் யாரும் விரும்பவில்லை. ஆனால் ஒரே ஒரு நபர்தான் வரவேண்டும் என சொல்லிக் கொண்டே இருந்தார். அதனை நாங்கள் உதாசீனம் செய்தோம். அதுவும் இன்று நிறைவேறி விட்டது.

சுதந்திர போராட்டத்தில் நீங்கள் பங்கேற்றீர்கள் என்பதற்காக இப்போது நாங்கள் அரசியலுக்கு வரவேண்டுமா என தந்தையிடம் கேட்டுள்ளேன். அதுபோல் நிலை வந்தால்? என்று அவர் கேட்பார். இன்று அந்த நிலை வந்துள்ளது. நான் அரசியலுக்கு வந்துள்ளேன். போக்கிடம் இல்லாமல் நான் அரசியலுக்கு வரவில்லை.

இந்த திறமை வளர்ப்பு மையத்தை இயலாத மற்றும் வாழ்க்கையின் கடை நிலையில் இருப்பவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

நம் மாநிலத்தில் வருடந்தோறும் 61 இலட்சம் மாணவ, மாணவிகள் புதிதாக ஆரம்பப்பள்ளிக்கு செல்கிறார்கள். நடுநிலைப்பள்ளிக்கு செல்லும்போது அவர்களின் எண்ணிக்கை 58 இலட்சமாக குறைகிறது.

10ஆம் வகுப்புக்கு செல்லும்போது 11 இலட்சமாகவும், பட்டப்படிப்புக்கு செல்லும்போது 3 இலட்சமாக குறைகிறது. இதில் விடுபட்ட இளைஞர்களின் கதி என்ன? அவர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா?

துப்பரவுப் பணிக்கு கூட பி.எச்.டி. படித்தவர் விண்ணப்பிக்கும் நிலை வந்துள்ளது. இதற்கு காரணம் நமது இளைஞர்கள் திறனை வளர்த்துக் கெள்ளாததால் தான்.

நான் சலூன் கடையில் 1½ மாதம் வேலை பார்த்திருக்கிறேன். அங்கு கிடைத்த பாடம் தான் பின்னாளில் நாள் வேறு தொழிலில் வளர காரணமாக இருந்தது. எந்த தொழிலும் கீழானது இல்லை.

சத்தியாக்கிரக போராட்டத்துக்கு பிறகு நம் நாட்டில் திறமை வளர்ப்பு போராட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும். இதில் இன்னும் தமிழகம் பங்கு பெறவில்லை. மற்ற மாநிலங்கள் இளைஞர்களுக்கு திறமை வளர்ப்பதை செயற்படுத்தி நடத்தி வருகிறது.

வேலை வாய்ப்புகளைத் தர பல்கலைக்கழகங்கள் மட்டும் போதாது. பல தொழில்கள் கற்பதற்கு ஆள் இல்லாமல் உள்ளது. வளர்ந்த நகரத்தில் முடி திருத்தும் தொழில் செய்தால் ரூ.1 இலட்சம் வரை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

இராணுவத்தில் இறப்பவர்களின் எண்ணிக்கையை விட சாலை விபத்தில் சிக்கி இறப்பவர்களின் எண்ணிக்கை 100 மடங்கு அதிகரித்துள்ளது. எனவே இளைஞர்களை இராணுவத்திற்கு அனுப்ப பெற்றோர்கள் முன்வர வேண்டும்.

இங்கே அனைத்தையும் இலவசமாக கொடுத்து விடுகிறார்கள். கிரைண்டர் கூட இலவசமாக கொடுக்கப்பட்டது. ஆனால் அதனை குறைந்த விலையில் கொள்முதல் செய்ததால் 3 மாதங்களுக்குள் பழுதாகிறது. அதனை சரி செய்வதற்கு போதிய ஆட்கள் இல்லை. அவர்களை உருவாக்க இந்த ‘திறன் வேலை வாய்ப்பு மையம்’ உதவும்.

இலவசம் 3 மாதங்களுக்குக் கூட தாங்காது. ஆனால் நாங்கள் ஏற்படுத்தியுள்ள இந்த மையம் வாழ்நாள் முழுவதும் தாங்கும்” என்று தெரிவித்துள்ளார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7