சங்கம் சார்பில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்திற்கு ‘தங்க தமிழ் மகன்’ விருது வழங்கப்பட்டது.
தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நவம்பர் 8ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை அரச முறை சுற்றுப்பயணமாக அமெரிக்காவின் சிக்காகோ, ஹூஸ்டன், வொஷிங்றன் டி.சி. மற்றும் நியூயோர்க் உள்ளிட்ட நகரங்களுக்கு விஜயம் மேற்கொள்கிறார்.
அங்கு, தமிழ்நாட்டுக்கான புதிய திட்டங்களுக்குத் தேவையான நிதி பெறுவது குறித்து உலக வங்கியின் தெற்காசிய பிரிவின் உயர் அலுவலர்களுடன் விவாதிக்கவும், தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகள் திரட்டுவது குறித்து இன்ரநஷனல் பினான்ஸ் கோர்பிரேஷன் மற்றும் முக்கிய நிதி நிறுவனங்களின் உயர் அதிகாரிகளை சந்தித்து பேசவும் இந்த பயணம் மேற்கொள்ளப்படுகிறது.
இதற்காக கடந்த 8ஆம் திகதி அதிகாலை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் இருந்து அமெரிக்காவுக்கு சென்றார்.
அமெரிக்காவின் சிக்காகோ நகரை சென்றடைந்த ஓ.பன்னீர்செல்வத்தை விமான நிலையத்தில் தமிழ் சங்கம் சார்பில் ஏராளமானோர் திரண்டு வந்து உற்சாக வரவேற்பளித்தனர்.
அங்குள்ள தமிழ் வைத்தியர்கள், தொழிலதிபர்கள், அரச அதிகாரிகள் மரியாதை நிமித்தமாக சிக்காகோ விமான நிலையத்துக்கு வந்து ஓ.பன்னீர்செல்வத்தை வரவேற்றனர்.
இந்நிலையில், அமெரிக்காவின் சிக்காகோ நகரில் உலக தமிழ் சங்கம் சார்பில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ‘தங்க தமிழ் மகன்’ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.