கடந்த 5 ஆண்டுகளாக புயல் உருவாவது 32 சதவீதம் அதிகரித்துள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் அடிக்கடி புயல் சின்னங்கள் உருவாகின்றன. அவைகள் பல்வேறு மாநிலங்களை தாக்கி சேதங்களை ஏற்படுத்தி வருகின்றன.
இந்த நிலையில் வங்கக்கடல், அரபிக்கடலில் புயல் உருவாவது சில ஆண்டுகளாக அதிகரித்துள்ளமை தெரிய வந்திருக்கிறது.
இதுகுறித்து இந்திய வானிலை மையத்தின் அதிகாரிகள் கூறுகையில், “கடந்த 5 ஆண்டுகளாக புயல் உருவாவது 32 சதவீதம் அதிகரித்து உள்ளது. 10 ஆண்டுகளில் 11 சதவீதம் உயர்ந்து இருக்கிறது. புவி வெப்பமயமாதல் காரணமாக புயல்கள் உண்டாகுவது அதிகரித்துள்ளது.
1985ஆம் ஆண்டுக்குப் பின்னர் 2018, 2019ஆம் ஆண்டுகளில் 7 புயல்கள் உருவாகி இருக்கின்றன. அதேபோல் 2018, 2019ஆம் ஆண்டுகளில் 6 அதிதீவிர புயல்கள் இந்தியாவை தாக்கி உள்ளன. இதற்கு முன்னர் அதிகபட்சமாக 1976ஆம் ஆண்டு 7 புயல்கள் தாக்கியிருந்தன.
இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அதிதீவிர புயலாக ‘பானி’ புயல் ஒடிசா மற்றும் மேற்கு வங்காளத்தை தாக்கியது. அதேபோல் ‘வாயு’, ‘புல்புல்’ போன்ற புயல்கள் உருவாகியிருந்தன. 2010-2019ஆம் ஆண்டு காலகட்டத்தில் சராசரியாக 4 புயல்கள் உருவாகியுள்ளன.
1980ஆம் ஆண்டில் சராசரியாக 3 புயல்கள் உருவாகின. இதுகுறித்து இந்திய வானிலை மைய அதிகாரி அனுபம் காஷ்யப் கூறும்போது, “கடந்த 5 ஆண்டுகளில் சராசரியாக ஒவ்வொரு ஆண்டும் 5 புயல்கள் வருகின்றன. இதில் 3 புயல்கள் அதிதீவிரமாக உள்ளன. இது புயல்கள் அதிகரிப்பை குறிக்கின்றன” என்றார்.