சாட்சி இருந்தும் நடவடிக்கை எடுக்காதது ஏன் என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன் வலியுறுத்தியுள்ளார்.
வெள்ளை வேன் கடத்தல்களுக்கு சாட்சிகளிருந்தும் இதுவரையில் எவ்விதமான நடவடிக்கைகளையும் எடுக்காதிருந்தமைக்கு அரசாங்கமும் அதன் பங்காளியான தமிழ் தேசியக் கூட்டமைப்பும் பொறுப்புகூற வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெள்ளை வான் கடத்தல் தொடர்பாக நாடாளமன்ற உறுப்பினர் இன்று (திங்கட்கிழமை) விடுத்துள்ள விசேட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் தெரிவிக்கையில், “அமைச்சர் ராஜித சேனாரட்னவின் ஏற்பாட்டில் நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது வெள்ளை வான்களில் சாரதியாக பணியாற்றியவர்களில் ஒருவரான அந்தோனி பெர்னாண்டோ மற்றும் கடத்தப்பட்டு விடுதலையான அத்துல மதநாயக்க ஆகியோர் பங்கேற்று வெள்ளைவான் கடத்தல்கள், மற்றும் சித்திரவதை முகாம்கள், சித்திரவதைகள், படுகொலை செய்யப்பட்ட 300 பேரை முதலைகளுக்கு பலியிட்டமை உள்ளிட்ட பல தகவல்களை வெளியிட்டனர்.
இந்த செயற்பாடுகள் அனைத்தும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளரும், பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளருமான கோட்டாபயவின் கீழ் இராணுவ அதிகாரிகளின் பங்களிப்புடன் இயங்கிய அணியொன்றால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெளிவாக கூறியுள்ளனர்.
2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் இதுபோன்ற பல விடயங்களை தமிழ் மக்களும், அவர்களின் பிரதிநிதிகளும் கூறியபோதும் அதற்கான சாட்சியங்கள் இருப்பது தொடர்பாக தெரிவித்தபோதும் அந்த விடயங்களை கருத்திலேயே கொண்டிருக்காத ராஜித சேனாரட்ன திடீரென இவ்வாறான சாட்சியங்களை தனது ஊடகவியலாளர் சந்திப்புக்கு அழைத்து வந்தமையின் பின்னணி என்ன?
அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் ஒருவருக்கு இவ்வாறான மிலேச்சத்தனமான விடயங்கள் தொடர்பாக எம்மால் கூறப்பட்டும் தனிப்பட்ட முறையில் அவருக்கு தெரிந்திருந்தும் இதுநாள் வரை வெளிப்படுத்தாமையும், நடவடிக்கைகள் எடுக்கப்படாமையும் தொடர்பாக அவர் பங்கேற்றிருந்த அரசாங்கமும், அதற்கு முண்டு கொடுத்துக் கொண்டிருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் பொறுப்புக் கூறவேண்டியது தார்மீக கடமையாகும்.
எமது கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் திருகோணமலை கடற்படை முகாமில் நிலத்தடி சித்திரவதை முகாம் இருந்தமை தொடர்பாக நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்திய போதும் அவ்வாறான எந்தவொரு விடயங்களும் இருக்கவில்லையென்று மறுப்புத் தெரிவிக்கப்பட்டது. அதுதொடர்பாக உள்ளக விசாரணை கூட முன்னெடுக்கப்படவில்லை.
பின்னர் ஐ.நா. குழு கண்காணிப்பு விஜயத்தினை மேற்கொண்டு திருமலையில் சித்திரவதை முகாம் இருந்தமை குறித்து உறுதிப்படுத்தியிருந்தபோதும் அதுதொடர்பாக எவ்விதமான நடவடிக்கைகளையும் அரசாங்கம் எடுத்திருக்கவில்லை. குறைந்த பட்சம் கூட்டமைப்பின் தலைவரான சம்பந்தன் தான் பிரதிநிதித்துவப்படுத்தும் மாவட்டத்தில் இவ்வாறானதொரு பாரதூரமான விடயமொன்று இருப்பது வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அதனைப் பொருட்டாக கொண்டு ஆட்சியாளர்களுக்கு நெருக்கமாக இருந்துவருகின்ற சூழலைப் பயன்படுத்தி தனது கருமங்களை முன்னெடுத்திருக்கவில்லை.
கொழும்பில் ஐந்து மாணவர்கள் உட்பட பதினொரு பேர் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக நீண்ட விசாரணைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற நிலையில் தற்போது அவர்கள் நிலத்தடி முகாமில் இயந்திரத் துப்பாக்கிகளால் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. 2009ஆம் ஆண்டு போரின் இறுதியில் சரணடைந்தவர்களும், விசாரணைகளுக்காக அழைத்துச் செல்லப்பட்டவர்களும் இன்னமும் வீடு திரும்பாத நிலைமையே நீடிக்கின்றது. அதற்கான சாட்சியங்களும் தற்போதும் உயிருடன் உள்ளன.
அவ்வாறு வலிந்து காணாமல் செய்யப்பட்டவர்களுக்கு ஆட்சியாளர்கள் உரிய விசாரணைகளை முன்னெடுத்து பொறுப்புக் கூறவேண்டும் என்று நாம் வலியுறுத்துகின்ற ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் கடந்த மஹிந்த அரசாங்கமும் சரி தற்போதைய அரசாங்கமும் சரி மறுதலிப்புக்களையும், காலம் கடத்தும் நடவடிக்கைகளையுமே மேற்கொண்டு வந்தது.
அதனைவிடவும் இத்தகைய சம்பவங்களுடன் தொடர்புடைய படையினர் கைதுசெய்யப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டாலும் சொற்ப காலத்தில் அந்த வழக்குகளை நாட்டின் வெவ்வேறு பிரதேசங்களில் உள்ள நீதிமன்றங்களுக்கும், கொழும்பு, அநுராதபுர நீதிமன்றங்களுக்கும் மாற்றி குற்றமிழைத்ததாக அவர்களை நீதிமன்றத்தின் ஊடாக சாணக்கியமாக விடுவித்தே வந்துள்ளது.
2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் பின்னர் வெள்ளைவான் கடத்தல்கள், சித்திரவதை முகாம்கள், காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று உள்நாட்டிலும் வெளிநாட்டில் யஸ்மின் சூக்கா அம்மையார் போன்றவர்களும் சான்றாதாரங்களுடன் வலியுறுத்திய போதும் கடந்த நான்கரை வருடங்களில் எவ்விதமான செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டிருக்கவில்லை.
மாறாக மஹிந்த ஆட்சியில் நடைபெற்ற மனித குலத்துக்கு எதிரான மிலேச்சத்தனங்களை பாதுகாக்கின்ற செயற்பாட்டினையே தற்போதைய ஆட்சியாளர்கள் மேற்கொண்டதோடு படைத்தரப்பில் இவ்விடயங்களில் தொடர்புபட்டுள்ளவர்களை குறைந்தபட்சம் விசாரணைக்கு உட்படுத்துவதற்கு பதிலாக அவர்களை உயர் பதவிகளில் அமர்த்தி அழகு பார்த்தனர்.
நீதியை வழங்காது மிலேச்சத்தனங்களை செய்தவர்களுக்கு துணைபோகும் ஆட்சியாளர்களுக்கு பங்காளிகளாகச் செயற்பட்டுக் கொண்டிருக்கும் கூட்டமைப்பு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தினையும் மலினப்படுத்தியதோடு நின்றுவிடாது அதற்கும் ஒருபடி மேலே சென்று ஆட்சியாளர்களுக்கு பொறுப்புக் கூறுவதற்காக கால அவகாசமும் பெற்றுக்கொடுத்தது. இந்த செயற்பாட்டினை மேற்கொண்டமையை நினைத்து ஆணை வழங்கிய மக்கள் முன்னிலையில் வெட்கித் தலைகுனிய வேண்டும்.
தமிழின அழிப்பின் ஒர் அங்கமாக நடைபெற்ற வெள்ளைவான் கடத்தல்கள் மற்றும் படுகொலை தொடர்பாக தற்போது பகிரங்கமாகியுள்ள நிலையில் உடனடியாக குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். மேலும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையும், சர்வதேச தரப்பினரும் உண்மைகள் வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் உடனடியான தலையீட்டினை செய்து அதுபற்றி அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு அழுத்தமளிக்க வேண்டும்.
நீதிக்கு எதிரான அடக்குமுறைகள் மற்றும் சித்திரவதைகளால் எமது இனத்தின் படுகொலைகளையும், அவலங்களையும் தேர்தல்களில் வாக்குச் சேர்ப்பதற்கு பயன்படுத்துவதற்கு பதிலாக அவை தொடர்பாக விரைந்து நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது. இதுபற்றி நிபந்தனையற்ற ஆதரவளிக்கும் தரப்புக்கள் சிந்திக்க வேண்டும்.
மேலும் கூட்டமைப்பு ஆதரவளிக்கும் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தனது கழுத்தைக் கொடுத்தாவது இராணுவத்தினை காப்பாற்றுவேன் என்று தென்னிலங்கை தேர்தல் மேடைகளில் முழக்கமிட்டு வருகின்ற நிலையில் இந்த மிலேச்சத்தனம் குறித்த நிலைப்பாட்டினை பகிரங்கப்படுத்துவரா? இல்லை கூட்டமைப்பாவது அவரிடத்தில் பொறுப்பான பதிலொன்றை பெற்று கூறுமா? என்று கேள்வி எழுப்பட்டுள்ளது” என அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.