பக்தாதி கொல்லப்பட்டது இன்னமும் உறுதிப்படுத்தவில்லை என ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கெய் லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.
அண்மையில் ஐ.எஸ். தீவிரவாத தலைவர் அபுபக்கர் அல் பக்தாதி, அமெரிக்க படையினரால் கொல்லப்பட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்தார்.
இந்த நிலையில் இதனை ஏற்க மறுக்கும் ரஷ்யா, இவ்விடயம் கருத்து தெரிவித்துள்ளது. இதுகுறித்து ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கெய் லாவ்ரோவ் கூறுகையில்,
“ஐ.எஸ் தலைவர் பக்தாதி பற்றிய தகவல்கள் போதுமானதாக இல்லை. அவர் கொல்லப்பட்டது இன்னும் உறுதிபடுத்தப்படவில்லை. எங்களது இராணுவம் இது குறித்து உண்மைத்தன்மையை ஆராய்ந்து வருகிறது. அவர்களும் அமெரிக்கா வெளியிட்ட தகவல்களை இதுவரை உறுதிபடுத்தவில்லை.
ஈராக்கில் சட்டவிரோத படையெடுப்பு, ஈராக் அரசின் சரிவு மற்றும் அமெரிக்கர்களால் சிறைகளில் இருந்து பயங்கரவாதிகள் விடுவிக்கப்பட்ட பின்னர் ஐ.எஸ். அமைப்பு தலைதூக்கியது. எது எப்படியோ அவர்கள் உருவாக்கியதை அவர்களே அழித்துவிட்டார்கள்” என கூறினார்.
ஐ.எஸ். தீவிரவாத தலைவர் அபுபக்கர் அல் பக்தாதி கொல்லப்பட்டதற்கு அடுத்து, அபு இப்ராஹிம் அல்-ஹாஷிமி அல்-குரேஷி ஐ.எஸ் அமைப்பின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.