இந்திய மீனவர்களின் படகுகளை திரும்பக் கொடுக்க முயற்சிகளை எடுப்போம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார்.
பிரதமர் மோடியுடன் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற கூட்டு செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மேற்கண்ட அறிவிப்பை விடுத்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “நான் இலங்கையின் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர், முதல் வெளிநாட்டுப் பயணமாக இந்தியாவிற்கு வந்துள்ளேன்.
எனக்கு சிறப்பான வரவேற்பு அளித்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திற்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நான் எனது பதவிக்காலத்தில், இந்தியா-இலங்கை இடையிலான உறவை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்ல விரும்புகிறேன்.
நானும் பிரதமர் மோடியும் இன்று மீனவர்கள் பிரச்சினை குறித்து விரிவாக விவாதோம். அதன்படி எங்கள் தடுப்பில் உள்ள இந்திய படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுப்போம்.
இந்த இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு, நீண்ட பாரம்பரியம் கொண்டது. இருநாடுகளும் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு விஷயங்களில் இணைந்து செயல்பட வேண்டும் என்பது எனது விருப்பம்.” என கூறினார்.