தேர்தலுக்கு முன்னர் சிறப்பு அறிவிப்பினை வெளியிடமாட்டார் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் குறித்து பிபிசி சிங்கள செய்தி சேவைக்கு கருத்து தெரிவித்த அவர், தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் முடிந்ததும் 16 ஆம் திகதி மாலை 6 மணிக்கு மட்டுமே சிறப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிடுவேன் என்று ஜனாதிபதி சிறிசேன தனக்கு தெரிவித்தார் என கூறினார்.
அத்தோடு தேர்தலுக்கு முன் எந்த இறுதி நிமிட சிறப்பு அறிக்கைகளையும் வெளியிட மாட்டேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனக்கு உறுதியளித்துள்ளதாகவும் மஹிந்த தேசப்பிரிய கூறினார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட அறிவிப்பொன்றினை வெளியிடுவார் என அண்மையில் ஊடகங்களில் பரபரப்பு செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில் இன்று இந்த விடயம் தொடர்பாக அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ள ஜனாதிபதி ஊடகப்பிரிவு, ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில் அவரது விசேட உரை 18 ஆம் திகதி இடம்பெறும் என சமூக ஊடக செய்திகளை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நிராகரித்ததுள்ளதாக அறிவித்துள்ளது.
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக சில தரப்பினரால் பகிரப்பட்ட சில தவறான அறிக்கைகள் குறித்து ஜனாதிபதி மிகுந்த வருத்தம் தெரிவித்துள்ளார் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.