விக்ரமசிங்க மீது குற்றஞ்சுமத்த முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.
ஏனெனில் அவர் சிறந்ததைச் செய்யவேண்டும் என்று கருதினாலும், அவருடன் இருப்பவர்கள் அதற்கு வாய்ப்பளிக்காமல் சுயநல நோக்கில் செயற்படுகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு வொக்ஷோல் வீதியில் அமைந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் பிரசாரக் காரியாலயத்தில் இன்று (வியாழக்கிழமை) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அத்துடன் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறக்கும் தீர்மானத்தை ரணில் விக்ரமசிங்க மேற்கொண்ட போதும், அவருடன் இருந்த சிலர் அதனை விரும்பவில்லை என்றும் ஹிருணிகா சுட்டிக்காட்டினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “எமது கடந்த நான்கு வருடகால ஆட்சியை இம்முறை ஜனாதிபதி தேர்தலில் மக்கள் புறக்கணித்திருக்கின்றார்கள். எனவே எவ்வித சச்சரவுகளுமின்றி அதனை நாம் ஏற்றுக்கொள்கின்றோம்.
தற்போதைய ஜனாதிபதிக்கு எமது வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் அதேவேளை, புதிய ஆளுந்தரப்பின் ஆட்சி எவ்வாறு அமைகின்றது என்பது குறித்து நாம் அவதானத்துடன் இருப்போம்.
2020, 2021 ஆம் ஆண்டுகளில் எமது நாடு பெருமளவான கடன்தொகையை மீளச்செலுத்த வேண்டிய நிலையில் இருக்கின்றது. அதனையும் எதிர்கொண்டு, பொருளாதாரத்தையும் ஏனைய துறைகளையும் எவ்வாறு ஸ்திரப்படுத்தப் போகின்றார்கள் என்பது குறித்து கண்காணிப்புடன் செயற்படுவோம்” என்று கூறினார்.