தீவிரவாதிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ள அமெரிக்க பல்கலைக்கழக விரிவுரையாளர்களை மீட்பதற்காக தலிபான் இயக்கத்தைச் சேர்ந்த 3 தீவிரவாதிகளை விடுவிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் குறிப்பிடத்தக்க சில பகுதிகளில் தலிபான் தீவிரவாதிகளின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. அரசாங்கத்திற்கு எதிராக தலிபான்கள் அவ்வப்போது தீவிரவாத தாக்குதலை நடத்தி வருகின்றனர்.
இராணுவமும் பொலிஸாருக்கும் தலிபான் மீது பதிலடியாக தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றன. தீவிரவாதிகள் பலரை பணயமாக பிடித்து சிறை வைத்துள்ளனர்.
கடந்த 2016 ஆம் ஆண்டு அமெரிக்க பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இரு விரிவுரையாளர்களை தலிபான் தீவிரவாதிகள் கடத்திச் சென்றனர். அவர்களை மீட்க பல்வேறு முயற்சிகளை ஆப்கானிஸ்தான் அரசாங்கம் மேற்கொண்டது. ஆனால் தற்போது வரை அவர்கள் விடுவிக்கப்படவில்லை.
இந்தநிலையில், பிணைக் கைதிகளான அமெரிக்க பல்கலைக்கழக பேராசியர்களை மீட்க சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 3 தலிபான் பயங்கரவாதிகளை விடுவிக்கவுள்ளதாக ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப் கானி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் கருத்துவௌியிட்ட அவர், “3 தலிபான்கள் விடுவிக்கப்பட்டு கட்டாருக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். அமெரிக்கா மற்றும் அவுஸ்ரேலியாவைச் சேர்ந்த இரண்டு விரிவுரையாளர்கள் தலிபான்களால் விடுவிக்கப்படுவார்கள்’ என குறிப்பிட்டார்.
இது ஆப்கானிஸ்தான் அரசாங்கம் மற்றும் தலிபான் இயக்கத்திற்கு இடையேயான அமைதி பேச்சுவார்த்தையின் ஒரு பகுதி என்றும், தீவிரவாதிகளின் விடுதலை மேலும் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது எனவும் அஷ்ரப் கானி தெரிவித்தார்.