இரண்டு அவுஸ்ரேலிய மாநிலங்கள் அவசரகால நிலையை அறிவித்துள்ளன. நாட்டின் கிழக்கில் அதிக மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் காட்டுத் தீ பேரழிவு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியுசவுத்வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்து மாநிலங்களில் கடந்த 3 நாட்களாக ஏற்பட்டுள்ள அசாதாரண காலநிலை காரணமாக
குறைந்தது 3 பேர் உயிரிழந்ததுடன், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
ஆனால் நாட்டின் மிகப் பெரிய நகரமான சிட்னியைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு நாளை (செவ்வாய்க்கிழமை) மிக மோசமான தாக்கம் ஏற்படும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்
இந்தநிலையில், அவுஸ்ரேலியாவில் நாடளாவிய ரீதியாக 120 க்கும் மேற்பட்ட காட்டுத் தீ சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
நியுசவுத் வேல்ஸில் மாத்திரம் சுமார் 970,000 ஹெக்டயர் நிலப்பரப்பு காட்டுத் தீயினால் அழிவடைந்துள்ளதுடன், 150 வீடுகள் வரை சேதமடைந்துள்ளன. அதேவேளை, குயின்ஸ்லாந்தில் 9 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளன.
“மக்கள் எங்கிருந்தாலும் எல்லோரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், அனைவரும் மோசமான காலநிலை குறித்து அவதானமாக செயற்பட வேண்டும். மக்கள் பாதிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது” என்று நியுசவுத் வேல்ஸ் முதல்வர் கிளாடிஸ் பெரெஜிக்லியன் இன்று (திங்கட்கிழமை) தெரிவித்தார்.