பிரபலமாகிய ஆடு ஒன்று அண்மையில் உடல் நலக்குறைவால் உயிரிழந்த சம்பவம் சமூகவலைத்தள வாசிகளுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
விளாடிவோஸ்டாக் நகரில் உள்ள உயிரியல் பூங்காவில் ‘அமுர்’ என்ற பெயருடன் சைபீரிய புலியொன்று வளர்க்கப்பட்டு வருகின்றது. கடந்த 2015 ஆம் ஆண்டு அந்த புலிக்கு உணவாக ஆடு ஒன்றை பூங்கா ஊழியர்கள் அதன் கூண்டுக்குள் அனுப்பி வைத்தனர்.
ஆனால் அந்த ஆட்டை கடித்து குதறி உண்பதற்கு பதிலாக அந்த புலி அதன் மீது அன்பு மழை பொழிந்தது . ஆடும், புலியும் நட்பாக பழகி வந்தன.
இதை பார்த்து, ஆச்சரியம் அடைந்த பூங்கா ஊழியர்கள் அந்த ஆட்டை புலியுடன் தொடர்ந்து பழகவிட்டனர். அந்த ஆட்டுக்கு ‘தைமுர்’ என பெயரிட்டு பூங்கா ஊழியர்கள் அழைத்து வந்தனர்.
ஆடும், புலியும் விளையாடும் ஔிப்படங்கள் மற்றும் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பிரபலமாகின.
ஆட்டுக்கு புலியின் மீது பயமற்றுப் போனதால் அடிக்கடி வம்பிழுத்து, விளையாடி சண்டையிட்டது. புலி இதை பெரிதாக கண்டுகொள்ளாமல் விளையாடி வந்தது.
ஆனால் கடந்த 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதமளவில் ஆடு தன்னிடம் வம்பிழுத்து விளையாடிய போது பொறுமையை இழந்த புலி திடீரென ஆட்டை வாயில் கவ்வி தூக்கி வீசியது. இதனால் ஆட்டுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
இதையடுத்து, பூங்கா ஊழியர்கள் ஆட்டையும் புலியையும் தனியாக பிரித்து வைத்து பாரமரித்து வந்தனர். அத்துடன் ஆட்டை தலைநகர் மொஸ்கோவுக்கு அனுப்பி வைத்து, சிறப்பு சிகிச்சை அளித்தனர்.
ஆனாலும் புலி தாக்கிய பாதிப்பில் இருந்து மீளாத ஆடு, தொடர்ந்து அந்த பூங்காவில் வாழ்ந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 5 ஆம் திகதி உடல் நலக்குறைவால் தைமுர் ஆடு உயிரிழந்தது.
இதனிடையே, ரஷ்ய மக்கள் பலரும் தைமுர் ஆட்டுக்கு சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.