இரகசிய உடன்பாடுகளை தான் செய்துகொள்ளவில்லை என புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
மஹியங்கனையில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் கூறுகையில், “இன்று எதிரணியினர் எமது செயற்பாடுகள் தொடர்பாக பொய்யான பரப்புரைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
அதாவது, நான் ஏதோ உடன்படிக்கையை ஏற்றுக்கொண்டேன் என்று கூறப்படுகிறது. என்ன உடன்படிக்கை என்று நான் அவர்களிடம் கேட்க விரும்புகிறேன்.
இங்கு ஒரு விடயத்தை நான் கூறுகிறேன். என்னை வேட்பாளராக தெரிவு செய்தபோதும், சிலர் உடன்படிக்கைகளுடன் என்னை சந்தித்தார்கள். நான் எதற்கும் அடிபணியவில்லை. நான் எந்த தரப்புக்கும் அடிபணியப் போவதில்லை. நான் முதுகெலும்புள்ள ஒருவன்.
இந்த நாட்டையோ, எமது சுயாதீனத்தையோ விற்கப்போவதில்லை. நான் மக்களிடம் கோருவது, எனக்கான ஆணையை மட்டும்தான்.
நீங்கள் இதை செய்யுங்கள்! நான் இதை செய்கிறேன் என நான் என்றும் கூறமாட்டேன். இந்த கீழ்த்தரமான அரசியல் கலாசாரத்துக்கு நான் என்றும் அடிபணிய மாட்டேன்.
எனவே, என்மீதான எந்தவொரு விமர்சனத்துக்கும் நான் கவலையடையப் போவதில்லை. எனது தேர்தல் விஞ்ஞாபனத்திலேயே நாம் அனைத்து விடயங்களையும் கூறிவிட்டோம்” என்று தெரிவித்தார்.