திருட்டுக்களில் சந்தேகநபர்களாகக் கருதப்படும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விபத்தில் சிக்கிய கார் ஒன்றை பலவந்தமாக இழுத்துச்செல்ல முயன்றபோது, வாகனத்தின் உரிமையாளர் பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து, குறித்த இரண்டு இளைஞர்களும் பொலிஸாரிடம் சிக்கிக் கொண்டனர்.
அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் ஏற்கனவே பல கார் திருட்டுக்களில் ஈடுபட்டிருந்தமை தெரியவந்துள்ளது. கனடாவில் விபத்தில் சிக்கிய வாகனங்களை, இழுத்துச் செல்லும் நிறுவனங்களுக்கிடையிலும் கடும் போட்டி நிலவுகின்றது.
விபத்தொன்று இடம்பெற்றால் அந்த வாகனத்தை இழுத்துச் சென்று பழுதுபார்க்கும் நிலையங்களில் விடுவதற்கும் அங்கு கடும் போட்டி ஏற்படுகின்றது.
குறித்த சகோதரர்கள் இருவரும் பழுது பார்க்கும் நிலையங்களுக்கு முகவர்களாக செயற்படுகின்றனர். அந்த வகையில் ஸ்கார்பரோவைச் சேர்ந்த கபிலன் விக்னேஸ்வரன் (வயது 24), நகுல் விக்னேஸ்வரன் (வயது 30) ஆகிய இருவரும் விபத்தில் சிக்கிய வாகனங்களை இழுத்துச் செல்லும் நிறுவனமொன்றை நடத்தியுள்ளமை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
எனினும், அவர்கள் இழுத்துச் செல்லும் விபத்துக்குள்ளான வாகனங்களை முறையாக பழுதுபார்க்கும் இடங்களில் சேர்ப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.