பிரிட்டிஷ் தூதரகப் பணியாளர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஊபர் சாரதிக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2017 ஆம் ஆண்டு டிசெம்பர் 16 ஆம் திகதி பெய்ரூட் அருகே ஒரு நெடுஞ்சாலையின் ஓரத்தில் ரெபேக்கா டைக்ஸின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
பெய்ரூட்டின் கெம்மாய்சே பகுதியில் 2017 ஆம் ஆண்டு டிசெம்பர் 15 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு தனது சக பணியாளர்களுடன் காணப்பட்ட ரெபேக்கா டைக்ஸ் (வயது 30), நள்ளிரவு நேரம் ஊபர் வாகனத்தில் பயணித்தார் என்று கூறப்பட்டுள்ளது.
ஊபர் சாரதி தாரிக் ஹூஷீ, ரெபேக்கா டைக்ஸின் கழுத்தை கயிற்றினால் நெரித்துக் கொலை செய்து அவரது உடலை நெடுஞ்சாலையின் ஓரத்தில் வீசியிருந்தார்.
ரெபேக்கா டைக்ஸ் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கழுத்து நெரித்துக் கொல்லப்பட்டதாக பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொலைக் குற்றங்களுக்கு லெபனான் நீதிபதிகள் மரணதண்டனை விதிப்பது வழக்கமாகும். இருப்பினும் மரணதண்டனைக்கு அதிகாரப்பூர்வமற்ற தடையிருப்பதனால் 2004 முதல் அங்கு மரணதண்டனை நிறைவேற்றப்படவில்லை.
கொலையாளி தாரிக் ஹூஷீ ஏற்கனவே குற்றப்பின்னணி கொண்டவர் என்று கூறப்படுகின்றது.
மோட்டார் சைக்கிள் ஒன்றைத் திருடியதற்காக ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை பெற்றதாகவும் மற்றும் திருட்டுக் குற்றச்சாட்டில் இரண்டுமுறை கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது