இந்தியாவுக்கு தொடர்ந்து ஆதரவளிப்போம் என ரஷ்யா தெரிவித்துள்ளது.
இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா – ரஷ்யா இடையிலான இராணுவம் மற்றும் இராணுவ தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான ஆணையத்தின் 16ஆவது உயர்நிலை கூட்டம் ரஷ்யாவின் மொஸ்கோவில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்றது.
இதில், இந்தியா சார்பில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான குழுவினரும், ரஷ்யா சாா்பில் அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் செர்கே ஷோய்கு தலைமையிலான குழுவினரும் பங்கேற்றனர்
இந்த கூட்டத்தில் இருதரப்புக்களினதும் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் அதிகரிப்பதற்கான வழிமுறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இதையடுத்து இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியா – ரஷ்யா இடையே 2021-30ஆம் காலகட்டத்துக்கான பாதுகாப்புத் துறை ஒத்துழைப்பு திட்டத்தை இறுதி செய்வதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்த இருதரப்பிலும் ஒப்புக்கொள்ளப்பட்டது.
இந்தியாவுக்கு இராணுவ தளபாடங்கள் மற்றும் ஆயுதங்கள் விநியோகிக்கும் முக்கிய நாடாக ரஷ்யா உள்ளது. அந்த நாட்டிலிருந்து கொள்முதல் செய்யப்படும் இராணுவத் தளபாடங்களின் பராமரிப்புக்காக, முக்கிய உதிரிப் பாகங்களையும் விநியோகிக்க வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கை நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது. இதுதொடா்பாக, ரஷ்யத் தரப்பிடம் வலியுறுத்தப்பட்டது.
பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளில் இந்தியாவுக்கான ஆதரவு தொடரும் என்றும் ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சர் உறுதியளித்துள்ளார். இந்தியாவின் பாதுகாப்புத் திறனை மேம்படுத்துவதற்கு தொழில்நுட்ப ரீதியிலான ஆதரவை வழங்க ரஷ்யா தயாராக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிரியாவில் ரஷ்ய இராணுவம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் உட்பட பல்வேறு சா்வதேச விவகாரங்கள் குறித்து இருவரும் விவாதித்தனர்” எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது